சோனியா காந்தி தலைமையில் நாளை மறுநாள் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூட்டம்: அடுத்த தலைவர் தேர்வு குறித்து ஆலோசனை?

புதுடெல்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில், நாளை மறுநாள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுத்தது. இதனால் காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கும் (ஜி23), கட்சியின் தலைமைக்கும் கருத்து மோதல்கள் அதிகரித்தன. கட்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவை சரிசெய்ய கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதையொட்டி அவர் மூத்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தி வருகிறார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்களை வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) சோனியா காந்தி சந்திக்க உள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெறும் இக்கூட்டத்துக்கு, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவிர இந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறும் கட்சியின் அமைப்புத் தேர்தல்கள், உறுப்பினர் சேர்க்கை, காங்கிரஸ் இயக்க போராட்டங்கள், விளக்கப்படங்கள் உருவாக்குவது ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘அமைப்புத் தேர்தல்கள் உட்பட பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதால் பொதுச் செயலாளர், மாநில பொறுப்பாளர்களின் கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. ஜி-23 தலைவர்கள் அமைப்புத் தேர்தலில் மாற்றம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். மேலும் கட்சியின் முழுநேர தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் நடத்த முடிவு எடுக்கப்படும். இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதால், கட்சியின் அடுத்தகட்ட வியூகங்கள் வகுக்கப்படும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.