மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கக் கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆணைய விசாரணையில் ஓ.பி.எஸ் அளித்த பதில்கள் தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்பட்டது வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் வா.புகழேந்தி இது தொடர்பாகச் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ஆறுமுகசாமி கமிஷன் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. முன்னாள் முதல்வர் எடப்பாடியால் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்கு காரணமானவர் ஓ.பி.எஸ் மற்றும் சில நிர்வாகிகள். பல இடையூறுகளுக்குப் பிறகு ஆணையம் செயல்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும் இது குறித்து குறிப்பிட்டிருந்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது பழனிசாமியுடன் நானும் இருந்தேன். ஆகையால் என் நண்பர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த விஷயங்கள் அனைத்தும் நன்றாகவே தெரியும். அவரை விசாரிக்க வேண்டும். இந்த கமிஷன் யாரையும் விடக்கூடாது, தவறு செய்தவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றார்” என்றார்.