தனி விமானத்தில் துபாய் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! சுற்றுப்பயணம் விவரம்…

சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தனி விமானத்தில் துபாய் பயணமாகிறார். அங்கு அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்பை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் உலக வர்த்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்து வைத்து, துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அந்நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்கிறார்.

தமிழக மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். முதல்வருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழு தலைவர் பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் செல்கின்றனர்.

இன்று இரவு துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கும் மு.க.ஸ்டாலின், நாளை காலை 10 மணிக்கு சர்வதேச பொருளாதார மந்திரிகள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிற்பகலில் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்று, தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கிறார். தமிழ்நாடு அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் உள்ள சிறப்புகள் பற்றி விரிவாக உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரசு முறைப் பயணமாக  இன்று சென்னையிலிருந்து புறப்பட்டு  துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார். உலகக் கண்காட்சிகள், மிகப்பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது, ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சி, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய (MEASA) பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி. இந்த உலகக் கண்காட்சி, துபாயில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது.

இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர், உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை மார்ச் மாதம் 25ஆம் தேதி அன்று திறந்து வைக்கிறார்கள். தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப்பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உட்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சுருங்கக் கூறினால், இந்த அரங்கிற்கு வருகை புரியும் அனைவரும், தமிழ்நாட்டின் அனைத்து சிறப்புகளையும் ஒரே இடத்தில் பார்வையிடும் அளவிற்கு, இந்த அரங்கம் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உலகக் கண்காட்சியில், இந்தியா உட்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில், பங்கேற்றிடும் ஒவ்வொரு நாட்டிற்கும், பிரத்யேகமாக அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த மாபெரும் கண்காட்சியை சுமார் 2.50 கோடி நபர்கள் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் அவர்களின் இந்த துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் போது தமிழ்நாட்டிற்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சர்களுடனான சந்திப்பு, துபாயில் உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, புலம்பெயர் தமிழர்களுடனான சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொழில் துறை அமைச்சர், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆகியோர் முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான குழுவில் அங்கம் வகிப்பார்கள்.

இவ்வாறு தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.