சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம் கோடை காலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளது. 24-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம் காரணமாக 24, 25-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், 26, 27-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக் கூடும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.