தமிழகம் வரும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை தயார் நிலையில் வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு

இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி தமிழகம் வரும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை தயார் நிலையில் வைக்குமாறு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, உணவுப் பஞ்சம் என பல்வேறு பிரச்சினைகள் தலை விரித்தாடுகின்றன. வாழ்வாதாரத்தை இழந்து, அடுத்த வேளை உணவுக்காக போராட முடியாமல் தவிக்கும் மக்கள் தமிழகத்தை நோக்கி படையெடுக்கத் துவங்கி உள்ளனர்.

கடந்த இரு நாட்களில் மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து உரிய ஆவணங்களின்றி தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற 16 பேரை கடலோரக் காவல் படையினர் கைது செய்தனர். ராமேஸ்வரம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர்களை மண்டபம் முகாமிற்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து மேலும் பலர் வாழ்வாதாரம் தேடி தமிழகம் வரக்கூடும் என்றும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை மண்டபம் முகாமில் தயார் நிலையில் வைக்குமாறு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள ஆணையில், இலங்கையில் இருந்து வரும் மக்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளை உடனடியாக செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், வீடு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும், மற்றும் அத்தியாவசிய தேவைகளை தயர் நிலையில் வைத்துக் கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் உரிய தேவைகளை பட்டியலிட்டு அதற்கான நிதித் தேவை முன்மொழிவுகளை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.