உலகின் ஆக்கத்திற்கு இன்றியமையாத சக்தியாக இருப்பது அக்னி. உயிர்கள் கருவறையில் உருவாவது, பின் உடலைக் காத்து வளர்த்திடத் தேவையான உணவினை உருவாக்குவது, இறுதியில் மரணம் அடைந்தபின் எரியூட்டுவது என வாழ்வியலில் ஒவ்வொரு நிலையிலும் இன்றியமையாத சக்தியாக இருப்பது அக்னி.
பஞ்சபூதங்களுள் அக்னியானது ஏனைய நான்கினுள்ளும் மறைபொருளாக விளங்குகின்றது.
அதாவது, வானில் – இடி மின்னல்; நிலத்தில் – எரிமலை ; கடலுக்குள் – வடவைத் தீ; காற்றினுள் – உரசுந் தீ -ஆகிய நிலைகளில் மறைபொருளாக செயல்படுவது அக்னியே. வேதங்கள் போற்றி வழிபடுவது அக்னி வடிவான பரம்பொருளைத்தான். சிவபெருமானின் எட்டு வடிவங்களில் ஒன்று இந்த அக்னி. செந்தழல் உருவரான சிவபெருமானை அக்னீஸ்வரராகப் போற்றுவது மரபு. வேதவல்ல அந்தணர்கள் வளர்க்கும் மூவகை அக்னிகளுக்கு தக்ஷிணாக்னி, காருகபத்யம், ஆஹவனீயம் என்பன பெயர்கள்.
நிலம், நீர், தீ, காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்கள் மற்றும் சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய அட்டமூர்த்தங்கள் எட்டுடன் ஒன்பதாவதாக சதாசிவமூர்த்தியும் சேர்த்து ஒன்பது வகையான அக்னி ரூபங்களாகச் சிவபெருமான் பூஜிக்கப் பெறுவது வழக்கம். இந்த 9 மூர்த்தங்களைக் குறிக்கும் விதத்தில் வேள்விச் சாலைகளில் 9 குண்டங்கள் அமைக்கப் பெறுகின்றன.
இவற்றை நவாக்னி என்பர். வேள்விச் சாலைகளில் அக்னியின் மேற்கண்ட ஒன்பது வடிவங்களுடன் சிவாக்னி, சூட்சுமாக்னி ஆகிய இரண்டையும் சேர்த்து மொத்தம் 11 அக்னிகள் பூஜிக்கப் பெறுவதாக ஐதிகம்.
வன்னி மரம் அக்னியின் அம்சம். முற்காலத்தில் வன்னி மரக்கட்டைகளை உரசுவதன் மூலம் உண்டாகும் நெருப்பினையே அக்னிகார்யங்களுக்குப் பயன்படுத்தினர்.
“விறகில் தீயினன் பாலில் படுநெய் போல்
மறைய நின்றுளன் மாமணி சோதியன்”
என்பது அப்பர்பெருமானின் வாக்கு.
நமது நாட்டில் பெரும்பாலான ஆலயங்களில் தலவிருட்சமாக போற்றப்பெறுவது வன்னி மரமே.
சிவபெருமானுக்கும், விநாயகருக்கும், துர்கைக்கும் உகந்த மரம் இது. நவகிரஹங்களில் சனிபகவானின் ஆதிபத்தியம் நிறைந்த மரம். அதீத அதிர்வுகள் நிறைந்த வன்னி மரத்தின் காற்று மனக்குழப்பங்களைத் தீர்த்து மூளையைத் தெளிவாக்க வல்லது என்றும், தைரியமான மனோபாவத்தினையும், புத்திக் கூர்மையினையும் தரக்கூடிய அருமருந்து இந்த வன்னி மரம் என்றும், வன்னி மரத்தினை மனதார வேண்டிக் கொண்டால் காரிய ஜெயம் உண்டாகும் என்பதும் தொன்மையான நம்பிக்கை. காரிய நிமித்தமாகச் செல்பவர்கள் வன்னி மரத்தினை வணங்கி விட்டுச் செல்லத் தடையேதுமின்றி காரியம் பலிதமாகும் என்பர்
இன்றும் வேதம் வல்ல அந்தணர்கள் தங்களது அனுஷ்டானங்களுக்குத் தேவையான அக்னியை வன்னிமரக் கட்டைகளை கடைந்தே உருவாக்குகின்றனர். வன்னி இயற்கையாக நெருப்பின் தன்மை உடையதால், கட்டைகளை உரசும் போதே அக்னி உருவாகி விடும்.
இதற்கு ‘அரணிக்கட்டை கடைதல்’ என்பது பெயர். இவ்விதமாக பெறப்படும் அக்னியைக் கொண்டே வேள்விச் சாலைகளில் ,ஹோமகுண்டங்களில் அக்னி வளர்க்கப்பெறுகிறது. இதுபோன்றுதான் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் எதிர்வரும் 27 -ம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக யாக சாலைகளில் அரணிக்கட்டையில் கடைந்து அக்னியை உருவாக்குகிற நிகழ்வு நடைபெற்றது.