திருமணம் மனைவி மீது மிருகத்தனத்தை கட்டவிழ்த்து விடும் லைசன்ஸ் அல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கில் கணவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. திருமணம் ஆணுக்கு எந்த சிறப்பு உரிமையையும் கொடுக்கவில்லை என்றும், பாலியல் வன்கொடுமை செய்தால் அது நிச்சயம் குற்றம்தான் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த பெண் தனது புகாரில் கணவர் தனது மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, மனைவி மீது “கொடூரமான மிருகத்தனத்தைக்காட்ட திருமண உறவு எந்த ஆணுக்கும் சிறப்புரிமை வழங்கவில்லை. கணவனால், மனைவி மீது நிகழ்த்தப்பட்டாலும் பாலியல் வன்கொடுமை தவறுதான். கணவனாகவே இருந்தாலும், மனைவியின் விருப்பத்திற்கு மாறான பாலியல் உறவை பாலியல் வன்கொடுமையாகவே கருதமுடியும். கணவன் தனது மனைவி மீது நடத்தும் இத்தகைய பாலியல் வன்கொடுமை மனைவிக்கு உளவியல் மற்றும் உடல் ரீதியாக கடும் பாதிப்பை ஏற்படுத்தும். கணவர்களின் இத்தகைய செயல்கள் மனைவிகளின் ஆன்மாவை காயப்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள், கணவனாக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கணவன்மார்கள், மனைவியின் உடல், மனம், ஆத்மாவில் ஆதிக்கம் செலுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் என்ற பழமையான சிந்தனை முற்றிலுமாக அழிக்கபட வேண்டும்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தகைய செயல்களால் பல நாடுகள் மேரிடல் ரேப் என்று கூறி தண்டனை வழங்குவதாக நீதிபதி சுட்டிக்காட்டினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM