புதுடெல்லி: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விமர்சித்ததுடன் இந்துக் கடவுள்களைக் குறிப்பிட்டு அவமதித்தாக, ராஜஸ்தானில் ஒரு தலித் வங்கி அலுவலர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரை கோயிலுக்கு அழைத்து மன்னிப்பு கேட்க வைத்ததுடன், அவரது முகத்தை தரையில் தேய்த்து வன்செயலில் ஈடுபட்டது தொடர்பாக ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான பாலிவுட் திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ பெரிய சர்ச்சையைக் கிளம்பியுள்ளது. இதை விமர்சித்து தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ராஜஸ்தானின் ராஜேஷ்குமார் மெக்வால் என்ற இளைஞர் எழுதியிருந்தார். தலித் சமூகத்தவரான இவர், ஜெய்பூரின் பெஹரூர் பகுதியின் தனியார் வங்கி ஒன்றில் அலுவலராக பணியாற்றுகிறார். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ராஜேஷ்குமார், சில இந்துக் கடவுள்களைக் குறிப்பிட்டு அவமதித்ததாகவும் புகார் எழுந்தது.
இதனால், கடும் கோபம் அடைந்த சில இந்துத்துவா அமைப்பினர் நேற்று வங்கியிலிருந்த ராஜேஷ்குமாரை அருகிலுள்ள கோயிலுக்கு இழுத்துச் சென்றனர். அதனுள் இருந்த கடவுள் சிலைகள் முன்பு ராஜேஷ்குமாரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தனர். பிறகு, கோபத்தில் ராஜேஷ்குமாரை தாக்கி, அவரது தலையை தரையில் பிடித்து அமுக்கினர். இதில், அவரது மூக்கை கீழே தேய்த்து கடுமையாகக் காயப்படுத்தினர்.
இந்தக் காட்சிகளை தைரியமாக தங்களது செல்பேசியில் வீடியோ பதிவாக்கி சமூக வலைதளங்களிலும் வைரலாக்கினர். இதையடுத்து, பெஹரூர் காவல் நிலைய போலீஸார் நடவடிக்கையில் இறங்கி ஏழு பேரை கைது செய்துள்ளனர். தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்திற்கு எதிராக ராஜேஷ்குமார் கடுமையான விமர்சனம் செய்திருந்தார். இதன் மீதானக் கருத்துகளாக சிலர், ‘ஜெய் ஸ்ரீராம்!’, ‘ஜெய் ஸ்ரீகிருஷ்ணா!’ என எழுதியிருந்தனர். இதற்கானப் பதிலாக ராஜேஷ்குமார் அந்தக் கடவுள்களை அவதிக்கும் வகையில் எழுதியிருந்தார். இதுதான், காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அவர் மீதான தாக்குதலுக்கு காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் ஏழு பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவாகி இருந்தது. இதன்படி அஜய்குமார் சர்மா, சஞ்ஜித்குமார், ஹேமந்த் சர்மா, பர்வேந்தர் குமார், ராம்வேந்தர்சிங், நிதின் ஜாங்கிட் மற்றும் தயாராம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.