கர்நாடக மாநிலத்தில் கல்விக் கூடங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவது தொடர்பாக மாணவர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு எழுந்தது. தொடர்ந்து போராட்டமாக அது வெடித்தது. இது தொடர்பாக அந்த மாநிலத்தில் சூழல் கையை மீறி சென்ற காரணத்தால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மாணவிகள் சிலர் மனு தாக்கல் செய்தனர். அதில் தங்களுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என சொல்லியிருந்தனர். அதை விசாரித்த நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரையில் பள்ளி, கல்லூரிகளுக்கு மத ரீதியிலான உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல வேண்டாம் என சொல்லியது.
அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இதனை அவசர கால மனுவாக விசாரிக்க சொல்லி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் தேவதத் காமத் ஆஜரானார். இந்தியா தலைமை நீதிபதி என்.வி. ரமணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது இந்த மனு. இதனை அவசர கால மனுவாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தார்.
“தேர்வுக்கும் இந்தப் விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு எந்த தேதியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்ற விவரத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவிக்கவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM