நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,215.58 கோடி கூடுதல் நிதி- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சென்னை:

சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:-

2021-2022-ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றத்தின் முன் சமர்ப்பிக்கிறேன். இந்த அவையில் வைக்கப்பட்டுள்ள இந்தத் துணை மதிப்பீடுகள் மொத்தம் 10,567.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கத்திற்கு வகை செய்கின்றன. இதில், 8,908.29 கோடி ரூபாய் வருவாய் கணக்கிலும் 1,658.72 கோடி ரூபாய் மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.

2021-2022-ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் “புதுப்பணிகள்” மற்றும் “புது துணைப்பணிகள்” குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட செலவினங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவது இத்துணை மதிப்பீடுகளின் முக்கிய நோக்கமாகும்.

துணை மதிப்பீடுகளில் கூடுதல் நிதியொதுக்கம் தேவைப்படும் சில முக்கிய இனங்கள் பின்வருமாறு:

* நகைக் கடன் தள்ளுபடிக்காக 1,215.58 கோடி ரூபாய்.

* கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியத்திற்காகவும், செயல்திறன் மானியத்திற்காகவும் 1,140.31 கோடி ரூபாய். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக 948.58 கோடி ரூபாய்.

* மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணத்திற்காக 546.83 கோடி ரூபாய்.

* கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காகவும் 333.55 கோடி ரூபாய்.

* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு 212.92 கோடி ரூபாய்.

பேரவைத் தலைவரே, 2021-2022-ம் ஆண்டிற்கான இறுதி துணை மதிப்பீடுகளை இம்மாமன்றம் ஏற்று இசைவளிக்க வேண்டுகின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.