பெங்களூரு-சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில், பெங்களூரின் 19 இடங்களில் சுரங்கப்பாதைகள்; 48 இடங்களில் நடை மேம்பாலங்கள் கட்டியுள்ள மாநகராட்சி, அவற்றை நிர்வகிப்பதில் அலட்சியம் காண்பிக்கிறது.வாகன போக்குவரத்து அதிகமுள்ள சாலைகளை கடப்பது மிகவும் கஷ்டம். மின்னல் வேகத்தில் பறக்கும் வாகனங்களால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பொதுமக்கள் சாலைகளை கடக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண பெங்களூரின் பல இடங்களில், சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்களை மாநகராட்சி கட்டியுள்ளது. எனினும், அவற்றை நிர்வகிப்பதில் போதிய அக்கறை காண்பிக்கவில்லை. குறிப்பாக நிருபதுங்கா சாலை, சாலுக்யா சதுக்கம், சேஷாத்ரி சாலை, கே.ஆர்.மார்க்கெட், ராஜ்குமார் சாலை, கப்பன் பூங்கா, டவுன் ஹால் முன் பகுதி உட்பட, பல்வேறு இடங்களிலுள்ள சுரங்கப்பாதைகள், நடை மேம்பாலங்கள் மோசமான நிலையில் உள்ளன.மிகவும் மோசமான நிலையில் உள்ள சுரங்கப்பாதைகளுக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. இன்னும் சில சுரங்கப் பாதைகளில் லேசான மழை பெய்தாலும், தண்ணீர் தேங்குகிறது. தாழ்வான பகுதியில் இருப்பதால், தண்ணீர் வெளியேற வசதியில்லை. இதனால் குப்பை கொட்டும் இடமாக மாறுகிறது.தனியார் ஒருங்கிணைப்பில் நடைபாதை மேம்பாலங்களை, மாநகராட்சி கட்டியுள்ளது. இவை மாநகராட்சிக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் ‘வருவாய்க்கு’ வழி வகுத்துள்ளதே தவிர மக்களுக்கு பயன்படவில்லை. மூத்த குடிமக்கள், சிறு பிள்ளைகளால் நடை மேம்பாலங்களின் படிகளை ஏறி இறங்க முடிவதில்லை. இதனால் வாகனங்களுக்கிடையே, சாலையை கடக்க வேண்டியுள்ளது.பணிகளை மேற்கொள்ளும் போதே, ‘லிப்ட்’ வசதி செய்ய வேண்டும்; கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என, மாநகராட்சி நிபந்தனை விதித்திருந்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள், இந்த நிபந்தனைப்படி நடை மேம்பாலங்களை கட்டவில்லை. விளம்பரங்களை பொருத்துவதற்கு மட்டுமே நடை மேம்பாலங்கள் பயன்படுகின்றன என, பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Advertisement