சென்னை:
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை 2018ஆம் ஆண்டில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.
ஆளுநர் முடிவு எடுக்காத நிலையில், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார். ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திராமல் தமிழக அமைச்சரவை முடிவின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என அவர் தனது மனுவில் கூறி உள்ளார்.
இந்த மனு தொடர்பாக தலைமை நீதிபதி முனிஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி வரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்திய அரசியல் சாசனம் 161வது பிரிவின் படி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அமைச்சரவையின் பரிந்துரை ஆளுநரை கட்டுப்படுத்தும் என்றும் வாதிட்டார். இந்த பரிந்துரை மீது 42 மாதங்களாக எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாததால், தனது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதால் நளினி இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாகவும் கூறினார்.
இந்த வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், இதுவரை பட்டியலிடப்படாத இந்த மனுவிற்கு எண்ணிட்டு விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள ரவிச்சந்திரன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ரவிச்சந்திரன் தரப்பில் இன்று ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட நிலையில் ரவிச்சந்திரனையும் விடுதலை செய்யவேண்டும் என கூறினார்.
இதையடுத்து ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தது தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.