நாடு முழுவதும் மார்ச் 31ம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கம்: முக கவசம், சமூக இடைவெளியை தொடர்ந்து கடைபிடிக்க ஒன்றிய அரசு வேண்டுகோள்

புதுடெல்லி: தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதால், நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் வரும்  31ம் தேதி முதல் நீக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை தொடர்ந்து பின்பற்றும்படி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பலத்த உயிர்ச் சேதம், பெரும் பொருளாதார இழப்புகள் என மோசமான பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்தியாவில்  கடந்த 2020ம் ஆண்டும் தேதி  முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தொற்று பரவலை தடுக்க, மக்களுக்கு ஏராளமான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது, நாடு முழுவதும் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மேலும், பல கோடி மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர். இதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் தற்போது தினசரி கொரோனா பாதிப்புகள், பலிகள் கணிசமாக சரிந்துள்ளன. எனவே, மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதனால், மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, பலிகள் சரிந்து விட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த  கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் இம்மாதம் 31ம் தேதி முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அனைத்து மாநில அரசுகள், யூனியன் அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நாட்டில் தற்போது  கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருவது மட்டுமின்றி, இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது. கடந்த 24 மாதங்களில் நோய் கண்டறிதல், கண்காணிப்பு, தொடர்பு தடமறிதல்,  சிகிச்சை, தடுப்பூசி போன்ற பல்வேறு நடவடிக்கைளின் காரணமாக கடந்த 7 வாரங்களில் தொற்று எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் உள்ள பதிவின்படி, நாடு முழுவதும் தற்போது 23,913 கொரோனா நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.28 சதவீதமாக குறைந்துள்ளது. அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் நாட்டில் 181.56 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. எனவே, நோய் தொற்றை சமாளிக்கும் திறன், தயார் நிலை போன்றவற்றை கருத்தில் கொண்ட பிறகு, நாட்டில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் கொரோனா பேரிடர் மேலாண்மைச் சட்ட விதிகளை செயல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்ற முடிவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்துள்ளது. இதன்படி, இந்த மாதம் 31ம் தேதியுடன் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்கும்படி அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, வரும்  31ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு, இந்த கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கான எந்த உத்தரவையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்காது. இருப்பினும், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அதற்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழிகாட்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  * நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1778 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. * கேரளாவில் 52 பேர் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 62 பேர் உயிர் இழந்துள்ளனர். இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 605 ஆக உயர்ந்துள்ளது.* நாடு முழுவதும் இதுவரையில் மொத்தம் 181.89 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கோவோவேக்ஸ் 3ம் கட்ட பரிசோதனைஇந்திய சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசியை பூஸ்டர் டோசாக செலுத்துவதற்கான 3ம் கட்ட  பரிசோதனையை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் இந்நிறுவனம்  விண்ணப்பித்தது. இதை பரிசீலித்த ஒன்றிய மருந்து கட்டுப்பாடு அமைப்பின் நிபுணர் குழு, 3ம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது. பாதாள சாக்கடைகளில் கண்காணிப்பு இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு  2 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ள போதிலும், அது பரவும் விதத்தை அனைத்து வகையிலும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டின் 5 மாநகரங்களில் பாதாள சாக்கடைகள், கழிவு நீர் வெளியேற்று கால்வாய்களில் கொரோனா வைரஸ் தென்படுகிறதா என்பதை ‘இந்திய சார்ஸ் கோவி-2 மரபணு பகுப்பாய்வு அமைப்பு’ கண்காணிக்க உள்ளது.  பின்னர், இந்த கண்காணிப்பு படிப்படியாக நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.