புதுச்சேரி: “புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிவரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது சொத்து கணக்கை வெளியிட தயாரா?” என்று அம்மாநில பாஜக சவால் விடுத்துள்ளது.
இது குறித்து புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘புதுச்சேரியில் தேசிய மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் வரும் 26-ம் தேதி காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை தனியார் உணவரங்கில் நடக்கிறது. தேசிய தலைவர் வானதி சீனுவாசன் தலைமை தாங்குகிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பாஜக மகளிரணி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம். தேசிய மகளிரணிக் கூட்டத்தையொட்டி, முன்னதாக புதுச்சேரி காமராஜர் சிலை அருகிலிருந்து நாளை மாலை தேசியக் கொடியுடன் மகளிர் ஊர்வலம் நடக்கிறது.
இதனையடுத்து, கம்பன் கலையரங்கில் முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த விழாவில், பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்று விருதுகள் வழங்குகிறார். புதுச்சேரி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
நாடு முழுவதும் உள்ள பாஜக மகளிரணியை வலுப்படுத்தும் வகையில், தேசிய மகளிரணி கலந்தாய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. தேசிய அளவில் மகளிர் மேம்பாடு, அவர்களுக்கான வளர்ச்சித்திட்டம் குறித்து அதில் விவாதிக்கப்படும். நாளை மறுநாள் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் சந்தோஷ் புதுச்சேரி வருகிறார். அவர் புதுச்சேரி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் தலைமையில் மாலை 5 மணிக்கு, மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.
நாடு முன்னேற்றம்பெற வேண்டுமென மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள் கண்ட கனவை, பாஜக ஆட்சியில் நிறைவேற்றி வருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை நாடு முழுவதும் தருகிறோம். இதனால்தான், நடந்த முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
புதுச்சேரியில் பாஜக வலுவான கட்சியாக உள்ளது. வருங்காலத்தில் முழுயான ஆட்சியை கொடுப்பதற்கான அத்தனை அமைப்பு ரீதியான வேலைகளையும் செய்யும். புதுச்சேரியில் தேசிய ஜனதா கூட்டணி ஆட்சியில் பல நலத்திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகிறது. நேர்மையான முறையில் காவலர் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நாராயணசாமி அரசு ஒரு நபருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக புதுச்சேரி பின்தங்கியுள்ளது. அதனை நாங்கள் சீரமைக்கிறோம். 10 மாதங்களில் சிறந்த நிலையை அடைய முடியாது. இந்த அரசு 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்யும்போது, புதுச்சேரியின் (பெஸ்ட் புதுச்சேரி) வளர்ச்சி தெரியும். நாடு முழுவதும் பிரதமர் மோடி தலைமையிலான 7 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் தான், மதக்கலவரம் இல்லாமல் உள்ளது. புதுச்சேரி எதிரகட்சித் தலைவர் சிவா இந்து விரோதியாக செயல்படுகிறார். இந்து ஆதரவாக செயல்படவில்லை.
புதுச்சேரி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி வரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அதனை நிரூபிக்க வேண்டும. அவர் தனது சொத்துக் கணக்கை வெளியிட தயாராக உள்ளாரா? அப்படி அவர் வெளியிட தயாராக இருந்தால், பாஜக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் அவர்களது சொத்துக் கணக்கை அடுத்த 5 ஆண்டுகளில் வெளியிட தயாராக உள்ளனர். நாராயணசாமி பொது மேடையில் விவாதிக்க தயாரா? எங்கள் ஆட்சியில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடக்கவில்லை’’ என்று சாமிநாதன் தெரிவித்தார்.