பெங்களூரு-”ஆனேக்கல்லின் இன்னக்கி, மரசூரு, லிங்காபுரா, கசபா பகுதிகளில் கட்டப்பட்ட குடியிருப்பு வாரிய லே — அவுட்களுக்கு ஏற்பட்டுள்ள நில விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படும்,” என வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.கர்நாடக சட்ட மேலவை கேள்வி நேரத்தில், நேற்று நடந்த விவாதம்:ம.ஜ.த., — ஸ்ரீகண்டே கவுடா: 1996ல் லிங்காபுரா கிராமத்தில், சில இடங்களை வாங்கி, வீட்டுமனைகளாக அபிவிருத்தி செய்து விற்கப்பட்டது. 2005ல் அரசு, இதே நிலத்தை கையகப்படுத்தி, நில உரிமையாளர்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டது.நில பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு, வீட்டுமனை அபிவிருத்தியானதற்கு, ஆவணங்கள் உள்ளன. கிராம பஞ்சாயத்துக்கு வரியும் செலுத்தப்படுகிறது. ஆனால் நில ஆவணங்களில், முந்தைய உரிமையாளரின் பெயரே பதிவாகியுள்ளது.நிலத்தை அரசு கையகப்படுத்தும் போது, ஆவணங்களை சரியாக ஆய்வு செய்யாததால், வீட்டுமனை வாங்கியவர்களுக்கு, தொந்தரவு ஏற்பட்டுள்ளது. தற்போது 60 குடும்பங்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன. அவர்களுக்கு மாற்று வீட்டுமனை வழங்க வேண்டும்.அமைச்சர் சோமண்ணா: அரசு கையகப்படுத்திய, மொத்த நிலத்திலும் பிரச்னைகள் இல்லை. ஆனேக்கல்லின் சில இடங்களில், 3 ஏக்கர் சம்பந்தப்பட்ட நிலத்தில் மட்டுமே, பிரச்னை உள்ளது. இதை சரி செய்ய நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்து விசாரணை நடக்கிறது. தீர்ப்பு வெளியான பின், நடவடிக்கை எடுக்கப்படும்.நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவோம். அதற்கு முன்னதாக, மாற்று வீட்டு மனை வழங்கினால், இதே போன்ற விவாதங்கள் ஆரம்பமாகும். ஒவ்வொருவருக்கும் மாற்று வீட்டுமனை கொடுத்தால், குடியிருப்பு கட்டுமான வாரியத்தையே மூட வேண்டியது தான்.இவ்வாறு விவாதம் நடந்தது.
Advertisement