நெல்லை புத்தகத் திருவிழாவில் ‘ஒரு நாளில் ஒரு புத்தகம்’ எனும் மாணவர் நூல் உருவாக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
‘பொருநை’ நெல்லை புத்தகத் திருவிழா நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி திடலில் கடந்த 17-ஆம் தேதி தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எதிர்பார்த்ததை விட மக்கள் குடும்பம் குடும்பமாக புத்தகத் திருவிழாவிற்கு ஆர்வத்துடன் வந்து புத்தகங்கள் வாங்கி செல்கின்றனர். தினந்தோறும் புத்தகத் திருவிழாவிற்கு மக்கள் வரும்போது கூடுதலாக மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளை அரங்கேறுகின்றன. அதில், ஒரு புதிய முயற்சியாக மாணவர்களின் படைப்பாற்றலுக்கு வாய்ப்பு தந்து ‘ஒரு நாளில் ஒரு புத்தகம்’ எனும் மாணவர் நூல் உருவாக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மகாதேவன் நூலாக்க விதிமுறைகளை அறிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த 80 மாணவ மாணவியர் பொருநை நாகரிகம், நதிநீர் மேலாண்மை, அகழ்வாய்வுகள், அரிய நூல்கள், நெல்லை வரலாறு, நெகிழியில்லா நெல்லை, வாசிப்பு அனுபவம் ஆகியவற்றை மையமிட்டு மாணவ மாணவியர் கட்டுரை, கவிதை, சிறுகதைகளை எழுதி 24 மணி நேரத்தில் நூலாக்கம் செய்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நூல் தயாரிக்கப்பட்டு 25.03.2022 வெள்ளிக்கிழமை அதன் நகல் பிரதி வெளியிடப்படுகிறது.
27.3.2022 அன்று நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு, மாணவர் படைப்பு நூலை வெளியிடுகிறார். புத்தகம் வாங்குதல், புத்தகம் வாசித்தல், புத்தகத் திறனாய்வு எனும் படிநிலைகளைத் தாண்டி நூல் எழுதுபவர்களாகக் கல்லூரி மாணவர்களை மாற்றுவதற்காக இம்முயற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு முன்னெடுத்துள்ளார். கல்லூரி மாணவ மாணவியர்களும் ஆர்வமாகப் படைப்பை உருவாக்கியுள்ளார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM