நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிஎச்டி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு எழுதி தகுதி மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நடைமுறைப்படி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பிஎச்டி படிப்பில் சேர முதுநிலை பட்டப்படிப்பில் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். அவர்கள் தேசிய தகுதித்தேர்வு (நெட்) மற்றும் ஆராய்ச்சிக்கான மானியத்தொகை (ஜெஆர்எப்) தேர்ச்சி பெற்றிருந்தால் உதவித்தொகை பெற முடியும், பட்டம் பெற்றபின்பு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவர்.
இந்த நடைமுறையை முழுமையாக மாற்றும் வகையில் புதிய விதிமுறைகளை யுஜிசி கொண்டுவந்துள்ளது. நாடு முழுவதும் எந்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் பிஎச்டி படிப்பில் சேருவதென்றாலும் நுழைவுத்தேர்வு அவசியம் என்பதே அந்த நடைமுறை. தேசிய தேர்வு முகமை(என்டிஏ) நடத்தும் நெட், ஜெஆர்எஃப் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்தந்த பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் நடத்தும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிஎச்டி படிக்க இடம் கிடைக்கும்.
தகுதி மதிப்பெண்
நெட், ஜெஆர்எஃப் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 60 சதவீத இடங்களும், கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 40 சதவீதம் என்ற வகையிலும் மாணவர் சேர்க்கை இருக்கும். நெட், ஜெஆர்எஃப் தேர்ச்சி பெற்று விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் சேர விரும்பும் படிப்பு தொடர்பாக நேர்முகத்தேர்வு நடைபெறும். இதிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இடம் கிடைக்கும். நுழைவுத்தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண் பெறுவது கட்டாயம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை உண்டு. பல்கலைக்கழகங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலம் இடம் கோரும் மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வுக்கு 70 மதிப்பெண், நேர்முகத்தேர்வுக்கு 30 மதிப்பெண்கள் என்ற வகையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். இரண்டு வழியிலும் பிஎச்டி படிப்பில் சேர தகுதி பெற்ற மாணவர்களுக்கு தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு இடம் வழங்கப்படும்.
முதுநிலை பட்டம் முடித்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ஏதாவது ஒரு நுழைவுத்தேர்வை எழுதி பிஎச்டி படிப்பில் சேர முடியும். தேசிய கல்விக் கொள்கையின்படி கொண்டு வரப்படும் 4 ஆண்டு பட்டம் முடித்த மாணவர்கள் 10க்கு 7.5 தர மதிப்பீடு இருந்தால் நுழைவுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். வெறும் 55 சதவீத மதிப்பெண்கள் மட்டும் எடுத்திருந்தால் அவர்கள் 4 ஆண்டு இளநிலை படிப்பிற்குப் பிறகு ஓராண்டு படிப்பை முடித்தால் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். இரண்டு வழியிலும் ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏதாவது ஒன்றில் இடம் காலியாக இருந்தால் மற்ற பிரிவு வழியாக தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு இடங்கள் நிரப்பப்படும்.
படிப்புக்கான கால அளவு
தற்போது பிஎச்டி படிப்புகளை குறைந்தபட்சம் 3 ஆண்டுகளில் இருந்து அதிகபட்சம் 5 ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும் என்று விதி உள்ளது. இதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகவும், அதிகபட்சம் 6 ஆண்டுகளாகவும் மாற்றப்படுகிறது. இதில் பெண்களுக்கு 240 நாட்கள் வரை பேறுகால சலுகையும் வழங்கப்படுகிறது. பிஎச்டி ஆராய்ச்சியை முடிக்கும் மாணவர்கள் அதை சமர்ப்பிக்கும் முன்பு ஆராய்ச்சியின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் காப்பியடிப்பதை கண்டறியும் மென்பொருள் சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையின்படி, பிஎச்டி பட்டப்படிப்பை தரமானதாக மாற்றும் முயற்சியாக இத்தகைய மாற்றங்களை யுஜிசி அறிமுகம் செய்துள்ளது. இதற்கான வரைவு திருத்தங்களை பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்காக யுஜிசி வெளியிட்டுள்ளது. வரும் 31-ம் தேதி வரை அவர்களின் கருத்துகளைப் பெற்று பின்னர் மத்திய கல்வித்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பி மாற்றங்களை இறுதி செய்யவுள்ளது.
இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பிஎச்டி படிப்பில் சேருகின்றனர். அவர்கள் அனைவரும் இனி யுஜிசி குறிப்பிட்டுள்ள இந்த 2 நுழைவுத்தேர்வுகள் வழியாக மட்டுமே பிஎச்டி படிப்பில் சேர முடியும். தமிழகத்தைப் பொறுத்தமட்டில், தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்படவில்லை. எந்த நுழைவுத்தேர்வையும் அனுமதிக்க மாட்டோம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டசபையில் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கும் யுஜிசி-க்கும் இடையே பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் என்ன முடிவெடுக்கப் போகின்றன என்பது புதிராகவே உள்ளது.