கிரெனடா:
இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்த் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிரெனாடாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக பந்து வீசி அசத்தியது. இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 31 ரன்னில் அவுட்டானார். முன்னணி வீரர்களான கிராலே 7 ரன், ஜோ ரூட் டக் அவுட், லாரன்ஸ் 8 ரன், பென் ஸ்டோக்ஸ் 2 ரன், பேர்ஸ்டோவ் டக் அவுட் என விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். இதனால் இங்கிலாந்து 100 ரன்களில் சுருண்டு விடும் என வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், பின்வரிசை வீரர்களான கிறிஸ் வோக்ஸ் 25 ரன்னும், ஓவர்டான் 14 ரன்னும் எடுத்தனர். 9 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜாக் லீச், ஷகிப் மகமூது ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 26 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி 90 ரன்கள் சேர்த்தனர். அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷகிப் 49 ரன்னில் அவுட்டாகினார்.
இறுதியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜாக் லீச் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட், கீமர் ரோச், கைல் மேயர்ஸ், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.