பின்வாங்கும் புடின்?… உக்ரைனுடைய எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் திட்டங்களில் மாற்றம்


புடின் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார், உக்ரைனுக்குள் ஊடுருவும் ரஷ்ய படைகளின் முயற்சி, உக்கிரமான உக்ரைனின் எதிர்ப்பு காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது திட்டங்களை ரஷ்யா மாற்றிக்கொள்ளக்கூடும் என மேற்கத்திய நாடுகளின் அலுவலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பிப்ரவரி 24 அன்று உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகள், மார்ச் 24 ஆன நிலையிலும், அதாவது, ஒரு மாதம் ஆன நிலையிலும், உக்ரைன் வீரர்களிடம் பயங்கர அடிவாங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

எளிதாக உக்ரைனைப் பிடித்துக்கொள்ளலாம் என்று தப்புக் கணக்குப் போட்ட புடின், இப்போது தனது படைகள் உக்ரைனுக்குள் முன்னேறத் தடுமாறி வருவதால், உக்ரைன் நாட்டின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றும் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, கிழக்கு டான்பாஸ் (Donbas) பகுதி மீது மட்டும் கவனம் செலுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த மேற்கத்திய நாட்டு அலுவலர் ஒருவர், உக்ரைனின் புத்திக்கூர்மையான எதிர்ப்பு, உக்ரைன் மக்கள் பெரிய அளவில் எதிர்க்காமல் ரஷ்யாவை ஏற்றுக்கொள்வார்கள் என்று என்ணிய ரஷ்யாவின் தப்பும் தவறுமான திட்டங்களை கவிழ்த்துப்போட்டுவிட்டது என்றார்.

உக்ரைனின் உக்கிரமான மற்றும் அதிக அளவிலான எதிர்ப்பை சற்றும் எதிர்பார்க்காததால் ரஷ்யா திகைப்படைந்துள்ளதாக தெரிவிக்கும் பிரித்தானிய பாதுகாப்புத்துறை தலைவரான Jim Hockenhull, உக்ரைன் மீது போர் செய்து அதைக் கைப்பற்றும் திட்டம் பலிக்காததால், இனி ரஷ்யா வேறு விதமாக திட்டம் தீட்டும் என்கிறார்.

அதன்படி, பொதுமக்கள் மீது இன்னும் அதிக தாக்குதல், உக்ரைனின் கட்டமைப்பை அழித்தல் மற்றும் மனிதாபிமான நெருக்கடி, அதாவது, மக்களுடைய உடல் நலம், பாதுகாப்பு போன்றவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான நீண்ட கால பிரச்சினைகளை ஏற்படுத்துதல் ஆகிய யுக்திகளை ரஷ்யா கையில் எடுக்கலாம் என எச்சரிக்கிறார் Hockenhull.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்யப்படைகள் உக்ரைனின் வடக்குப் பகுதியில், Kyivஇலிருந்து 18 மைல் தூரத்துக்கு கிழக்கு நோக்கி பின்வாங்கியுள்ளதாகவும், அவை தற்போது தாக்குதல் திட்டத்துக்கு பதிலாக, தங்களைக் காத்துக்கொள்ளும் நடவடிகைகளைத் துவங்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் பென்டகன் அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.