மேற்கு வங்காள மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹத்தில் உள்ள பர்ஷல் கிராமத்தின் துணை தலைவராக இருந்தவர் பாது ஷேக். இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த 4 பேர் ஷேக் மீது வெடிகுண்டு வீசி பயங்கர தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த பாது ஷேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது கொலை காரணமாக அந்த கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு கும்பல் வன்முறையில் ஈடுபட்டது.
போக்டுய் கிராமத்தில் உள்ள வீடுகளை சூறையாடிய நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் பல வீடுகளுக்கு தீ வைத்தது. அதில் சுமார் 10 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 8 பேர் பலியாகினர் என உறுதி செய்யப்பட்டது. ஒரே வீட்டில் இருந்து 7 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் மம்தா பானர்ஜி கூறியதாவது:-
ராம்பூர்ஹாட் கொலையில் சந்தேகப்படும் நபர்கள் சரணடையாவிட்டால் அவர்களை வேட்டையாடி கைது செய்யப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை காவல்துறை உறுதி செய்யும்.
பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களின் உறுப்பினர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், சேதமடைந்த வீடுகளை புனரமைக்க தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்.
வங்காளம் முழுவதும் பதுக்கியுள்ள சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு