நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மோடமங்கலம் அருகே உள்ள தண்ணீர்பந்தல்பாளையம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இதில், சுமார் 400 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பாலா என்ற மாணவன் பதினோராம் வகுப்பு படித்துவந்தார். இன்று காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற அந்த மாணவன், மாணவி ஒருவரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டு ஆத்திரமடைந்த பள்ளியின் தாவரவியல் ஆசிரியை தெய்வம்மாள் என்பவர், அந்த மாணவனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்த மாணவன் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை சாதி ரீதியாக ஒருமையில் பேசி, வகுப்பறைக்கு வெளியே வெயிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிற்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணவன் பாலா, கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளியின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி குதித்து, அருகிலுள்ள ஈரோடு – சேலம் ரயில்வே தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பெற்றோர், பாதிக்கப்பட்ட மாணவரின் உறவினர்கள், இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பள்ளி முன் கூடினர். “இந்தச் சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்த மாணவரின் சாவுக்கு நீதி வேண்டும்’ என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் தந்தை மோடமங்கலம் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர். இவர், கட்டடத் தொழிலாளி. இறந்த மாணவனின் தாய் செல்வி கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவர் கடிதம் ஒன்று எழுதியிருப்பதாகவும், அந்தக் கடிதம் தற்போது அந்த சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் இருப்பதாகவும், போலீஸார் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸாரை உறவினர்கள் வலியுறுத்தினர். அதையடுத்து, போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.