இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. விசா நடைமுறைகள் முடிவடையாத காரணத்தால் முதல் போட்டியில் CSK வீரர் மொயின் அலி விளையாட மாட்டார் என்று தெரியவந்தது. இந்தச் சூழலில், இன்று அவருக்கு விசா கிடைத்திருக்கிறது. இன்றே மும்பை வந்தடைகிறார் மொயின்.
“அவர் நேற்றே விசா ஆவணங்களைப் பெற்றுவிட்டார். இன்று மும்பைக்குப் புறப்பட ஆயத்தமாகி கொண்டிருக்கிறார். இன்று மாலை மும்பை வந்துவிடுவார். மும்பை வந்தாலும் முதல் போட்டியில் அவரால் விளையாட முடியாது. நடைமுறைகளின் படி சில நாள்களுக்கு தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார். எனினும் குழப்பம் முடிவுக்கு வந்தது மகிழ்ச்சி!” என இது குறித்து தெரிவித்திருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன்.
மூன்று நாள்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மார்ச் 31-ல் நடக்கவிருக்கும் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களம் காணுவார்.
இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலி ஐபிஎல்-லில் விளையாட பிப்ரவரி 28-ல் விசாவுக்காக விண்ணப்பித்திருந்தார். அடிக்கடி இந்தியாவிற்கு வருகை தருபவர் என்ற போதும் மொயின் அலிக்கு விசா கிடைக்க மூன்று வாரங்களுக்கு மேல் ஆகியிருக்கிறது. அவருக்கு விசா கிடைக்க தாமதமானதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிசிசிஐயிடம் உதவி கேட்டது. இந்நிலையில் ஒரு வழியாக அவர் இந்தியா வருவது உறுதியாகியிருக்கிறது.