பைக் ரேஸ்:
தலைநகர் சென்னையின் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் பைக் வீலிங் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கும் அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 18-ம் தேதி, மெரினா சாலை, மயிலாப்பூர் பகுதிகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியானது.
அந்த வீடியோ பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதையடுத்து, வீடியோவில் இருந்த இளைஞர்கள் யார் என்பதைத் தேடிக் கண்டறிந்து காவல்துறையினர் எட்டு பேரைக் கைது செய்திருக்கின்றனர். அவர்களில் இருவர் சிறார்கள். கைதான இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இன்ஸ்டகிராம் மூலம் ஏராளமான இளைஞர்கள் ஒன்றிணைவதும், பின்னர் சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவதும் தெரியவந்தது. போலீஸார் அந்த குழுவில் உள்ள இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், பைக் ரேஸில் ஈடுபட்ட எட்டு பேரை போலீஸார் கைது செய்த பின்னரும்கூட, பலர் பைக் சாகசங்களில் ஈடுபட்ட வந்தனர்.
தொடர் கதை:
கடந்த 21-ம் தேதி வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி அருகில் இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கும்பல் பாடி மேம்பாலம் வரை பைக் ரேஸிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும், “எங்களை முடிந்தால் பிடித்துப் பாருங்கள்” என்று இன்ஸ்டாகிராமில் சவால்விடும் வகையில் பதிவு செய்ததும் தெரியவந்தது. அதையடுத்து, காவல்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸார் பைக் எண்களை வைத்து ரேஸில் ஈடுபட்ட ஐந்து பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் சென்னை காவல்துறையில் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் கடந்த ஐந்து தினங்களில் மட்டும் பைக் சாகசங்களில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் சிறார்கள். இவர்களிடமிருந்து 21 விலை உயர்ந்த பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று காவல்துறையினர் எச்சரித்திருக்கின்றனர்.