புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியா 400 பில்லியன் டாலர் அளவில் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. நிதி ஆண்டு முடிவதற்கு முன்னதாகவே திட்டமிட்ட இந்தஇலக்கை இந்தியா அடைந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி குறித்து பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘400 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்து, அதை அடைந்துள்ளது. இதற்காக நமது விவசாயிகள், நெசவாளர்கள், சிறு குறு நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன். நமது ‘தற்சார்பு இந்தியா’ பயணத்தில் இது ஓர் மைக்கல். உள்ளூர் பொருட்கள் உலக அளவில் செல்கிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
நடப்பு நிதி ஆண்டில் இந்தியா, சரக்குகள் (400 பில்லியன் டாலர்) மற்றும் சேவைகள் (250 பில்லியன் டாலர்) என மொத்தமாக 650 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தது.
இந்நிலையில் நிதி ஆண்டு முடிய இன்னும் 9 தினங்கள் உள்ள நிலையில், சரக்குகள் ஏற்றுமதியில் திட்டமிட்ட இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீத உயர்வு ஆகும். 2020-21-ம் நிதி ஆண்டில் 292 பில்லியன் டாலர் அளவில் இந்தியா ஏற்றுமதி செய்தது.
அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 33 பில்லியன் டாலர் அளவில் சரக்குகள் ஏற்றுமதி ஆகியுள்ளன. பெட்ரோலியம் தயாரிப்புகள், மின்னனு சாதனங்கள், பொறியியல் பொருட்கள், தோல், காஃபி, பிளாஸ்டிக், ஜவுளிகள், இறைச்சி மற்றும் பால் தயாரிப்புகள், புகையிலை உள்ளிட்டவை ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
– பிடிஐ