புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத்தை குவித்து ஊடுருவ முயன்றதை தொடர்ந்து, இந்தியாவும் படைகளை குவித்துள்ளது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையேயிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவுக்கு சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று மாலை திடீர் பயணமாக வந்தார். முன்னதாக, ஆப்கானிஸ்தானுக்கும் அவர் முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் பயணம் சென்றார். அங்கு தலிபான் தலைவர்களை சந்தித்து பேசிய பிறகு, டெல்லிக்கு வந்தார். இன்று அவர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தால் ரஷ்யாவை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கின்றன. இந்த விவகாரம் பற்றியோ அல்லது லடாக் பிரச்னையை பற்றி பேசவோ வாங் திடீர் பயணம் வந்திருப்பதாக கருதப்படுகிறது.