புதுடெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு நேற்றும் 2வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘முல்லை பெரியாறு அணையில் தமிழகம் 152 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம் என்ற அனுமதியுடன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பை கேரள அரசு பொருட்படுத்தவில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசு எதை செய்வது என்றாலும் கேரள காவல் எல்லைக்குள் சென்றுதான் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க கேரள அரசு மறுத்து வருகிறது. இது பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள பெரிய பிரச்னையாக உள்ளது’ என்றனர். அப்போது, ஒன்றிய அரசு வழக்கறிஞர், ‘முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மேற்பார்வை குழு வழங்கக்கூடிய பரிந்துரைகளை 2 மாநிலங்களும் கடைப்பிடிப்பதில்லை,’ என்றார்.பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது: இந்த அணை விவகாரத்தில் கேரள அரசு முழு ஒத்துழைப்பு வழங்காவிட்டால், தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம். அணை விவகாரத்தில், ஒரு நிரந்தர தீர்வு காண விரும்புகிறோம். அணை பராமரிப்பு, பாதுகாப்பு விவகாரத்தில் 2 மாநிலங்களும் அமர்ந்து பேசி, நிரந்தர தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். ஏனெனில், பல ஆண்டுகளாக தொடரும் அணை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறோம். இதற்காக நீதிமன்றம் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றாலும்கூட, தயாராக இருக்கிறோம். முக்கிய பரிந்துரைகளை வழங்கும் வகையில் மேற்பார்வை குழுவை மாற்றியமைக்கலாம் என நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. மேலும், இக்குழு வழங்கக்கூடிய பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் செய்து முடிக்க, குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்குள் அப்பணிகளை செய்யவில்லை என்றால், அப்பணியை மேற்பார்வை குழுவே மேற்கொள்ளலாம். அதற்கான நிதியை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடம் இருந்து வசூலிக்கும் வகையில் இக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.