காரைக்கால்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என காரைக்கால் திமுக எம்எல்ஏ நாஜிம் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து காரைக்கால் சட்டமன்ற உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான நாஜிம் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள கடித்தத்தில்: “காவிரி நதியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு அதற்கு அனுமதியளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது போல புதுச்சேரி அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
காவிரி நடுவர் மன்றம் 2007ம் ஆண்டு அளித்த இறுதித் தீர்ப்பையும், நதி நீர் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் தன்னிச்சையாக மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்குவதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
காவிரி நதி நீர் பிரச்சினை மாநிலங்களின் உணர்வுப் பூர்வமான பிரச்சினையாகும். கர்நாடக அரசு மேகதாதுவிலோ அல்லது காவிரிப் படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்கம் தொடர்பான திட்டங்களையோ சம்பந்தப்பட்ட மற்ற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தக் கூடாது. மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பில் குறிப்பிடப்படாத அணையை மேகதாதுவில் கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி அளிக்கவோ கூடாது. கர்நாடக அரசின் முயற்சியை முறியடித்து காரைக்கால் விவசாயிகளின் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.