கொல்கத்தா: மேற்குவங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் ராம்புராட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தலைவர் பாதுஷேக் என்பவர் திங்கட்கிழமை இரவு கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 8 பேர் எரித்துக் கொல்லப் பட்டனர்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘ராம்புராட் கலவரம் எதிர்பாராத ஒன்று. மேற்குவங்கத்தில் உள்ள அனைவரும் எங்கள் மக்கள்தான். யாரையும் பாதிப்புக்கு உள்ளாக்க விரும்பவில்லை. கொலைகளை நியாயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் உ.பி, குஜராத், பிஹார், ராஜஸ்தானிலும் இதுபோன்று நடக்கின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்’’ என்றார்.
முன்னதாக, பிர்பும் கலவரம் கொடூரமானது என்று ஆளுநர் ஜகதீப் தன்கர் கூறியிருந்தார். ஆளுநரின் கருத்து தேவையற்றது என்று மம்தா கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மம்தாவுக்கு ஆளுநர் நேற்று அனுப்பிய கடிதத்தில், ‘‘மற்ற மாநிலங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகக் கூறியும் என் கருத்து தேவையற்றது என்று கூறியும் பிரச்சினையை திசை திருப்பாதீர்கள். இதுபோன்ற கொடூரங்கள் நடக்கும்போது ஆளுநர் மாளிகையில் அமர்ந்தபடி நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது’’ என்று கூறியுள்ளார்.
இதனிடையே, பிர்பும் கலவரம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. கலவரம் நடந்த இடத்தில் மாவட்ட நீதிபதி முன்னிலையில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகக் குழுவினர், உடனடியாக ஆய்வுக்காக தடயங்களை சேகரிக்க வேண்டும் என்றும் கலவரம் தொடர்பாக மேற்குவங்க அரசு வியாழக்கிழமை (இன்று) பிற்பகல் 2 மணிக்குள் நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
– பிடிஐ