கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூ ஷேக், கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கிராமத்தில் வன்முறை வெடித்தது. வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் கருகி பலியாகினர். இந்நிலையில், பர்ஷால் கிராமத்துக்கு நேற்று நேரில் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தோர், கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவதாக உறுதி அளித்தார். மேலும், தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவியும், சேதமடைந்த வீடுகளை கட்டுவதற்கு ரூ.2 லட்சமும் அறிவித்தார். பின்னர், பாதிக்கப்பட்ட மக்களிடையே பேசிய அவர், “குற்றவாளிகள் சரணடையாவிட்டால், அவர்கள் வேட்டையாடி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார். இந்நிலையில், கொல்லப்பட்டவர்களின் எரிக்கப்படுவதற்கு முன்பாக கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.