நாசிக்: மோசடி வழக்கில் இருந்து, ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டின் மகன் வைபவின் பெயரை நீக்க வேண்டுமென, புகார் கொடுத்தவர் கோரியுள்ளார்.
நெருங்கிய நட்பு
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள நாசிக்கில், தொழிலதிபர் சுஷில் பாலசந்திர பாட்டீல் என்பவர், போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது: ராஜஸ்தான் அரசின் சில பணிகளுக்கான, ‘டெண்டர்’ வாங்கித் தருவதாக, குஜராத் காங்கிரஸ் நிர்வாகியான புருஷோத்தம் வலேரா கூறினார். மேலும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுடன் தனக்கு நெருங்கிய நட்பு இருப்பதாக கூறினார்.
ராஜஸ்தானில் அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி கூறினர். அதை நம்பி, 7 கோடி ரூபாய் முதலீடு செய்தேன். ஆனால் பணிகளும் வரவில்லை; பணமும் வரவில்லை. இவ்வாறு புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து, வைபவ் கெலாட், புருஷோத்தம் வலேரா உட்பட 16 பேர் மீது, நாசிக்கின் கங்காபூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு மாற்றம்
இந்நிலையில், கங்காபூர் போலீசார் கூறியதாவது: புகார் கொடுத்த பாட்டீலிடம் வழக்கு தொடர்பாக விசாரித்தோம். அப்போது அவர், ‘ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டுக்கு, இந்த மோசடியில் எந்த தொடர்பும் இல்லை; வழக்கிலிருந்து அவரது பெயரை நீக்க வேண்டும்’ என கூறினார். இந்த வழக்கு, தற்போது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் கூறினார்.
‘காங்., அரசை கலையுங்க’
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி நேற்று கூறியதாவது:காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், தலித்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலித் சிறுமியர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகியுள்ளனர். தலித் வாலிபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தலித்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில், ராஜஸ்தானில் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துவிட்டது. அதனால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கலைத்துவிட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.