இவ்வருட முற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விஷேட நடமாடும் சேவையின் போது யாழ்ப்பாண மக்களால் இரு அமைச்சர்களினதும் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட விடயங்கள் தொடர்பிலான தொடர் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, 2022 மார்ச் மாதம் 21ஆந் திகதி நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டமொன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸின் தலைமையில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது வனவிலங்கு சரணாலயங்களின் எல்லைகள், யாழ்ப்பாணத்தில் கரையோரப் பாதுகாப்பு ஒதுக்கீடு, பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நட்டஈடு வழங்குதல், மயிலட்டி துறைமுக மீன்பிடிப் பிரச்சனை, கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மக்களால் முன்வைக்கப்படும் அனைத்து விடயங்களுக்கும் உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர். மேலதிக மீளாய்வு நிகழ்வொன்று உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, மீன்பிடி அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் கப்பல் அமைச்சு, சுற்றுச்சூழல் அமைச்சு, காணி அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக ‘நீதிக்கான அணுகல்’ என்ற நடமாடும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் மக்களை மையமாகக் கொண்ட திட்டங்களை சிறப்பாக வழங்குவதற்காக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதன் முன்னுரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ஈடுபாடுகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் விரும்புகின்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 மார்ச் 24