புதுடெல்லி: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றால், படத்தை யூடியூப்பில் பதிவேற்ற விவேக் அக்னிகோத்ரியை பாஜகவினர் கேட்க வேண்டும்’ என டெல்லி முதல்வர் கலாய்த்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் நேற்று நடந்த கூட்டத்தொடரின் இடையில் “மாநிலத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று பாஜகவினர் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதில் பதில் அளிக்கும் விதமாக இன்று வியாழக்கிழமை பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரியிடம் படத்தை யூடியூப்பில் வெளியிடுமாறு பாஜகவினர் கேட்க வேண்டும். அப்போது அனைவரும் இலவசமாக பார்க்க முடியும்.
காஷ்மீர் பண்டிட்கள் பெயரில் சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர். நீங்கள் போஸ்டர் ஒட்டும் வேலையை பார்த்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
முன்னதாக பீகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா, உத்தரப் பிரதேசம், குஜராத், திரிபுரா, கோவா மற்றும் உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.