சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் முன்கூட்டிய விடுதலைக்கோரிய வழக்கில், தமிழகஅரசு ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நளினி வழக்கையும் பட்டியலிட கூறியுள்ளது.
தமிழ்நாடு சிறையில் 10ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் சிறை கைதிகளை, தலைவர்களின் பிறந்தநாளை யொட்டி விடுதலை செய்யும் நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக ரவிச்சந்திரன் சிறைதண்டனை பெற்று வரும் நிலையில், தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் அரசாணையை சுட்டிக்காட்டி வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆயுள் கைதிகள் விடுதலை தொடர்பான அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தமிழக அமைச்சரவை முடிவின் அடிப்படையில் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி மனுத்தாக்கல் கூறியிருந்தார். அவரது மனுவில், தனது மனுமீது கடந்த 42 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காததால் தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
இந்த மனுவையும் பட்டியலிட பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.