ரஷ்யா வீழ்ந்தால்.. இந்தியா சீனா அமெரிக்கா கை கோர்க்குமா?.. சாமி எழுப்பும் கேள்வி!

உக்ரைன் போருக்குப் பின்னர் ரஷ்யா வீழ்த்தப்பட்டால், சீனா, அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா புதிய கூட்டணியை அமைக்குமா என்று
சுப்பிரமணியம் சாமி
கேள்வி எழுப்பியுள்ளார்.

உக்ரைன் மீதான போரை இப்போதைக்கு ரஷ்யா நிறுத்துவதாக தெரியவில்லை. தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தப் போருக்குப் பின்னர் என்ன மாதிரியான சூழல் ஏற்படும் என்பது குறித்து உலக நாடுகளிடையே விவாதம் கிளம்ப ஆரம்பித்துள்ளது.

உக்ரைன் வீழ்த்தப்படும், அந்த நாட்டை தரைமட்டமாக்கி விட்டு முழுமையாக ரஷ்யா கைப்பற்றி விடும் என்று பலரும் நம்புகிறார்கள். அதேசமயம், உக்ரைனைக் காக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் களம் இறங்கலாம். போர் பெரிதாகும், அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படலாம். ஐரோப்பிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்திக்கும். அதேசமயம், ரஷ்யா வீழ்த்தப்படும் என்று பலர் கூறுகிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் சுப்பிரமணியம் சாமியும் தன் பங்குக்கு ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளார். அதாவது உக்ரைன் விவகாரத்தில் ஒரு வேளை ரஷ்யா வீழ்த்தப்பட்டால், அதன் பின்னர் சீனா, அமெரிக்காவோடு இணைந்து புதிய கூட்டணியை இந்தியா உருவாக்குமா என்பதுதான் சாமி கேட்டுள்ள கேள்வி. இதற்கு பலரும் பதிலளித்து வருகின்றனர்.

சாமி டிவீட்டுக்குப் பதில் அளித்துள்ள பாகல் மனீஷ் என்பவர் கூறுகையில், அப்படி நடந்தாலும் கூட சீனாவுக்குத்தான் அதிக லாபம் கிடைக்கும். சீனா பெருமளவிலான பணத்தை கடன் என்ற பெயரில் சார்க் நாடுகளில் குவித்து வைத்துள்ளது. ஆசிய பிராந்தியத்தில் தூதரக அளவில் இந்தியாவை விட சீனாவின் கையே ஓங்கியுள்ளது. சீனா உலகின் பேக்டரி என்றால், இந்தியா உலகின் நுகர்வோர் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

மனோஜ் ஸ்ரீவத்சவா என்பவர் கூறுகையில், அமெரிக்காவை ஒருபோதும் நாம் நம்ப முடியாது. எனவே சீனாவை நாம் நம்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்படலாம். ரஷ்யா நிச்சயம் அழியாது. மாறாக உக்ரைன்தான் அழியும். அழிய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கோசவி பரேஷ் என்பவர் புதிய கோணத்தில் இந்தப் பிரச்சினையை பார்க்கிறார். அதாவது இந்தப் போரினால் அமெரிக்கா பலமிழக்கும், செல்வாக்கை இழக்கும், சீர்குலையும். பதிலுக்கு உக்ரைனை வீழ்த்தி ரஷ்யா பலம் பெறும். உலகின் புதிய சக்தியாகவும் அது உருவெடுக்கும் என்பது இவரது கருத்தாக உள்ளது. பிரிகேஷ் யாதவ் என்பவரும் இதை கருத்தையே பிரதிபலிதித்துள்ளார். அமெரிக்காவின் பலவீனத்தை ரஷ்யா அம்பலப்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியில் மட்டுமல்லாமல் பாதுகாப்பு ரீதியிலும் தான் பலமான நாடு என்பதை ரஷ்யா நிரூபித்து விட்டதாக இவர் சொல்கிறார்.

பார்க்கலாம்.. உக்ரைன் போருக்குப் பின்னர் என்ன மாதிரியான உலக ஒழுங்கை நாம் பார்க்கப் போகிறோம் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.