ராய்ச்சூர்-கோடைக்காலத்தில், மின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தேவைக்கு தகுந்தபடி, மின்சாரம் உற்பத்தி செய்ய, ஆர்.டி.பி.எஸ்., எனும் ராய்ச்சூர் அனல் உற்பத்தி நிலையத்தில், நிலக்கரி பற்றாக்குறை உள்ளது.பொதுவாக கோடைக்கால ஆரம்பத்தில், ஆர்.டி.பி.எஸ்.,சில், 1,5 லட்சம் டன் வரை நிலக்கரி சேமிப்பில் இருக்கும். நடப்பாண்டு வெறும் 10 ஆயிரம் டன் நிலக்கரி உள்ளது. இது குறைந்தபட்சம், ஒரு நாள் பயன்பாட்டுக்கும் போதாது.தெலுங்கானாவின், சிங்கரேனி, ஆந்திராவின் மகாநதி தொழிற்சாலைகள், மஹாராஷ்டிராவின் வெஸ்டர்ன் தொழிற்சாலைகள், கர்நாடகாவுக்கு நிலக்கரி வினியோகிக்கின்றன. தற்போது இத்தொழிற்சாலைகள், தேவைக்கு தகுந்தபடி வினியோகிக்கவில்லை. 50 சதவீதம் மட்டுமே வருகிறது.ஆர்.டி.பி.எஸ்.,சின் எட்டு யூனிட்களில், 1,720 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். எட்டு யூனிட்களும் செயல்பட வேண்டுமானால், தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. பற்றாக்குறை உள்ளதால், தற்போது நான்கு யூனிட்டுகள் மட்டுமே செயல்படுகின்றன.கோடைக்காலத்தில், மின்சார பயன்பாடு அதிகமாவதால், தேவையும் அதிகமாக இருக்கும். ஆனால் நிலக்கரி பற்றாக்குறையால், எதிர் வரும் நாட்களில், மின்சார பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளதாக, அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
Advertisement