மாஸ்கோ: ரூ.5.35 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், சொகுசுப் படகு, 700 கார்கள் என ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகள் அனைவரையும் மலைக்க வைப்பதாக உள்ளன.
உக்ரைன் மீது போர் தொடுத்த பின்னர் உலக அளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இந்நிலையில், உலகின் 6-வது பணக்கார மனிதர் புதின் என்று சொத்து நிர்வாகம் தொடர்பான ஆய்வுகளை நடத்தும் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
விளாடிமிர் புதின் 1952-ல் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். புதின்1975-ல் ரஷ்யாவின் உளவு நிறுவனமான கேஜிபியில் சேர்ந்தார். பின்னர் நாட்டின் அதிபராக உயர்ந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், குடும்பத்தினர் குறித்தும் இதுவரை வெளிப்படையாகத் தெரிவித்ததில்லை.
இந்நிலையில், ஹெர்மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துகளை மதிப்பிடும் நிறுவனம் புதினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதில் பட்டேக் பிலிப்ஸ், லாஞ்ச் அன்ட் சோஹ்னே டவுபோகிராப் உட்பட ரூ.5.35 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், சொகுசுப் படகு, 700 கார்கள் ஆகியவை அடங்கும். மேலும்பல ரகசிய அரண்மனைகள், ஜெட் விமானங்களையும் அவர்வைத்துள்ளார். அவரிடம் 58 ஹெலிகாப்டர்கள், விமானங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கருங்கடலுக்கு மிக அருகே 1,90,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள சொகுசு பங்களா அவருக்கு உள்ளது.
மேலும் அவரிடம் பறக்கும் கிரெம்ளின் என்ற பெயரில் அதிநவீன சொகுசு விமானமும் உள்ளது. இதில் அதிநவீன சொகுசு வசதிகள் உள்ளன. இதில் உள்ள கழிப்பறைகள் தங்கமுலாம் பூசப்பட்டவையாகும். இத்தாலியில் 6 மாடி கொண்ட அதிநவீன சொகுசுப் படகும் உள்ளது.
ரஷ்ய அதிபருக்கு இவ்வளவு சொத்துகளும் வசதிகளும் உள்ளனவா என்று மலைக்கும் வகையில் அவரது சொத்துகள் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.