அஜித்தின் ‘வலிமை’ படத்தின் வசூல் அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அஜித் ரசிகர்களின் நீண்ட காத்திருப்புக்குப்பின் வெளியான ‘வலிமை’ கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்‘வலிமை’ வெளியாகி ஒரு மாதத்தைக் கடந்து இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், ‘வலிமை’ படத்தின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உரிமையைக் கைப்பற்றிய தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் உள்ளிட்டோர் ‘வலிமை’ நல்ல வசூலைக் கொடுத்தது என்றே ஊடகங்களுக்குத் தெரிவித்து வந்தனர். இதற்காக, கலைமகன் முபாரக் இயக்குநர் ஹெச். வினோத்தை நேரில் சந்தித்து மாலை அணிவித்து நன்றியும் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், ‘வலிமை’ படம் வெளியாகி 20 நாட்களைக் கடந்தபோதே 224 கோடியைக் கடந்துவிட்டது என்று ஒருபுறமும் ‘வலிமை’ எதிர்பார்த்த வசூலைக் குவிக்கவில்லை என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் சீறிப்பாய்ந்தன. ’வலிமை’ வசூல் மர்மமாகவே இருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் முதன்முறையாக வசூல் அப்டேட்டைக் கொடுத்து ‘வலிமை’ வெற்றிப் படம் என்பதை உறுதி செய்துள்ளார். ’வலிமை’ நாளை மார்ச் 25 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் நிலையில், ‘வலிமை’ இதுவரை 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது என்று அதிகாரபூர்வமாக போனி கபூர் தெரிவித்துள்ளார். ’வலிமை’ வசூல் வதந்திகளுக்கு ஃபுல்ஸ்டாப் வைத்துள்ளதால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.