விருதுநகரில் பட்டியலினப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இளம்பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 4 சிறுவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இவ்வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்பேரில், வழக்கு ஆவணங்கள் அனைத்தும் காவல்துறையிடம் இருந்து சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் வினோதினியிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையை டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ள நிலையில், சிறப்பு அதிகாரியாக சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசியும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் கைதானவர்களில் 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட கணினி, செல்ஃபோன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM