புதுடெல்லி: கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடர்பான கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரிக்க கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கல்வி நிறுவங்களில் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு விதித்திருந்த தடையை உறுதி செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை அடுத்த வாரத்தில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) தள்ளுபடி செய்தது. “இந்த விவகாரத்தை பரபரப்பாக்க வேண்டாம்” என்று வழக்கறிஞர்களிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதேபோல் மனுக்களை விசாரிக்க குறிப்பிட்ட தேதியினைத் தெரிவிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த விசாரணையின்போது மனுதார்களின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர தேவதத் காமத், “மார்ச் 28-ம் தேதி தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. பின்னர் ஒரு வருடம் முடிந்து விடும். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளிக்குள் நுழையவிடாமல் தடுக்கப்படுகிறார்கள். நீதிபதி அடுத்த வாரத்தில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம்” என்றார்.
இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இந்த விவகாரத்திற்கும் தேர்வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்” என்றார்.
முன்னதாக, இந்த விவகாரத்தில் அவசர விசாரணை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவிகள் சிலர் வகுப்புக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 5-ம் தேதி கல்வி நிறுவனங்களுக்குள் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது.
இந்தத் தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், மார்ச் மாதம் 15-ம் தேதி தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், மாநில அரசின் தடை உத்தரவை உறுதி செய்தது. சீருடை பரிந்துரைக்கப்படும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதைக் கட்டுப்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது. மேலும், சீருடைகளுக்கான விதிமுறைகளின் கீழ் இத்தகைய கட்டுப்பாடுகள் “அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படும்” என்று தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.