மது அருந்தும் பள்ளி மாணவிகள்:
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் பொன்விளைந்த களத்தூர் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிலர் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் மது அருந்தும் காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளி மாணவர்களின் இந்த செயல் பெற்றோர்கள் மத்தியிலும், சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தில் மது அருந்திய சம்பவம் தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறை விசாரணையை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும்காலங்களில் தொடராமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மாணவர்கள் தவறான பாதைகளுக்குச் செல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.
ராமதாஸ் வேதனை:
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “பொது இடத்தில், அரசுப் பேருந்தில் பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் எந்தவித அச்சமும் இல்லாமல் மது அருந்துவது சாதாரண ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயல். இதற்கு மாணவர்களை மட்டும் குறை கூறிவிட முடியாது. இந்த தவறு நடப்பதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்படக் காட்சிகளும், தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திருந்து வைத்திருக்கும் அரசும் தான் முதன்மையான காரணமாகும். பொது வெளியில் மது அருந்துவது, காலி மதுபாட்டில்களை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இது போன்ற காட்சிகள் இளைய தலைமுறையினர் மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை.
கடந்த 2003-ம் ஆண்டு மதுக்கடைகளை அரசுடைமை ஆக்கிய பின்னர் தெருக்கள் தோறும் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில் நூலகமும், ஆலயமும் இருக்கிறதோ இல்லையோ, மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளைக் கடந்துதான் அனைத்து மாணவர்களும் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவேண்டிய நிலை உள்ளது. முன்பு மதுக் கடைகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாகத் தான் இருந்தன. மது என்ற சாத்தன் குறித்து மாணவர்களுக்குத் தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவர்களின் சீரழிவுக்குக் காரணம்.
தமிழகத்தில் மதுக்கடைகள் மதியம் 12 மணிக்குத் தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுவதாகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. காலையில் பள்ளிக்கூடம் செல்லும் 17 வயது கூட நிரம்பாத மாணவர்களின் கையில் மதுபாட்டில்கள் எங்கிருந்து கிடைத்தன. இந்த கேள்விக்குப் பதில் கூறாமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாகக் கடந்து செல்ல முடியாது. திருச்செங்கோட்டில் மாணவர்கள் வகுப்பறைகளில் மது குடித்த அவலத்தையும் தமிழகம் பார்த்தது. கரூரிலும், மணப்பாறையிலும் மாணவர்கள் கடுமையான போதையில் சீருடையுடன் சாலையில் மயங்கி விழுந்து சுயநினைவின்றி கிடந்த கொடுமையைத் தமிழகம் பார்த்தது.
எல்லாவற்றுக்கும் உச்சமாகப் பேருந்தில் மாணவிகள் மதுக் குடிக்கும் சீரழிவைத் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை. மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் மூலமாகத் தான் அரசை நடத்தவேண்டும் என்ற நிலை இருக்கும் வரையில், இதுபோன்ற சீரழிவுகளைத் தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் எதிர்கால தலைமுறையினரையும், தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.