பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 2020 -ல் காலமானார். அப்போது அவருக்கு வயது 74. உலகெங்கும் வாழும் இசை ரசிகர்கள் பலரும் அவரின் குரலுக்கு ரசிகர்கள். அவரது உடல் காஞ்சிபுரத்திலுள்ள தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரிலுள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பிக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி. சரண் அமைத்து உருவாக்கி வருகிறார். ஓராண்டாக நடக்கும் இப்பணி அங்கு நிறைவடையவுள்ளது. இங்கு அமையும் சிலைகள் பாண்டிச்சேரி ஆரோவில் சஞ்சீவி நகர் பகுதியில் சிற்பக்கூடத்தில் உருவாகியுள்ளன.
இதுபற்றி சிற்பக்கூடத்தினர் கூறுகையில், “தாமரைப்பாக்கத்தில் எஸ்.பி.பி நினைவில்லத்தில் ஓராண்டாக பணி நடந்துவருகிறது. அங்கு ஏராளமான சிலைகள் வடிவமைத்துள்ளோம். அங்கு பாறையைக் குடைந்து எஸ்பிபி முகத்தை வடிவமைக்கத் திட்டமிட்டோம். அதற்காக ஆறு டன் எடைக்கொண்ட பாறை திருவக்கரையில் பெறப்பட்டது. ஆறு மாதங்களாக பாறையை குடைந்து அதில் எஸ்.பி.பி முகம், விருட்சம் மற்றும் அவரது கையெழுத்து, அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவற்றை வடிவமைத்துள்ளோம். சிற்பி கருணாகரன் குமார் இதற்கான வடிவமைப்பை செய்து அவர் தலைமையில் ஆறுசிற்பிகள் இதை வடிவமைத்தோம். எஸ்பிபி முகத்தின் கீழே அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தையும் குறிப்பிட்டுள்ளோம். “SARVE JANAASSU JANA BHAVANTHU…SARVESU JANAA SSUKINO BHAVAN” (“சர்வே ஜனாஸ்ஸு ஜனா பவந்து…
ஸர்வேசு ஜனா சுகினோ பவன்”) என்று எழுதியுள்ளோம். இப்பணிகள் முடிவடைந்து மாலையில் இப்பாறை வடிவமைப்பை கிரேன் மூலம் வாகனத்தில் ஏற்றி தாமரைப்பாக்கம் அனுப்பினோம். அங்கு பொருத்தும் பணிகள் நடக்கும்” என்று குறிப்பிட்டனர்