கண்கவரும் பிரமாண்ட கட்டட வடிவமைப்புகள், அலங்கார வேலைப்பாடுகள் உலகம் முழுவதும் இருந்து 192 நாடுகள் கலந்து கொள்ளும் ‘துபாய் எக்ஸ்போ 2022’ உலகின் மிகப் பெரிய கண்காட்சிகளில் ஒன்று. அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம், பண்பாடு, கலை, பொழுதுபோக்கு எனப் பல தளங்களில் பரிணமிக்கும் இந்தக் கண்காட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவிருக்கிறார். முதல்வரான பிறகு அவர் செல்லவிருக்கிற முதல் வெளிநாட்டு பயணம் இது. அவருக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (மார்ச் 23) சென்ற நிலையில் இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் துபாய் செல்ல உள்ளார். தமிழகத்திற்கு என்று அமைக்கப்படவிருக்கும் அரங்கை நாளை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார். முதல்வரின் விசிட் பல முதலீடுகளை மாநிலத்துக்கு கொண்டு வரும் என்கிறார்கள். தமிழ்நாட்டைப் பிரதிநித்துவப்படுத்தும் அரங்கு அமைப்பதற்கு 5 கோடி அளவில் செலவிடப்பட்டுள்ளது. இந்த அரங்கு துபாய் எக்ஸ்போவில் அமைந்திருக்கும் இந்தியன் பெவிலியனில் காட்சிப்படுத்தப்படுகிறது. பிரமாண்டமான இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
இந்தியா பெவிலியன்!
கடந்த ஆண்டு அக்டோபர்1-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி மார்ச் 31 வரை ஆறு மாத காலத்திற்கு துபாயில் நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 192 நாடுள், முக்கியமான அமைப்புகள், கண்காட்சியை இணைந்து நடத்தும் உலகளாவிய நிறுவனங்கள் என 200 -க்கும் மேற்பட்ட அரங்கங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் இந்தியாவிற்கு தரப்பட்டிருக்கும் பெவிலியன் மிகப்பெரியது.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அரங்கைத் திறந்து வைத்தார். இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய தருணங்களைப், பல்வேறு வகையான கலாசாரங்களைத், தொழில் வளர்ச்சி, முதலீட்டு வாய்ப்புக்களைக் காட்சிப்படுத்தும் வகையில் இந்த பெவிலியன் அமைக்கப்பட்டுள்ளது. ‘India on the Move’ என்பது தான் இதன் தீம்.
இசையின் சொர்க்கம்!
60 க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. உலகெங்கும் இருந்து இசை, சினிமா கலைஞர்கள் கலந்துக் கொள்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனிருத் பிப்ரவரி 23 இல் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதில் இன்னொரு சிறப்பம்சம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிர்தோஸ் ஸ்டுடியோ. துபாய் சென்ற இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதோடு இந்த ஸ்டுடியோவுக்கு வருகை தந்திருக்கிறார். இளையராஜா -ஏ.ஆர்.ரஹ்மான் சந்திப்பு நடந்ததும் இங்கு தான். அரபியில் பிர்தோஸ் என்பதற்கு சொர்க்கம் என்று பொருள்.
கீழே விழாத அருவி!
துபாய் எக்ஸ்போவின் இன்னொரு ஆச்சரியம் இந்த அருவி. இதனைத் தலைகீழ் அருவி என்று கூட சொல்லலாம். மேலே இருந்து விழுகிற நீர் கண் முன்னே காணாமல் போய்விடும். கீழே இருந்து மேலே செல்வது போன்ற தோற்றமும் உண்டாகும். புவியியல் விதிகளை ஏமாற்றி வடிவமைக்கப்பட்ட இந்த அருவியை லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த WET என்கிற நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மூன்று தீம்கள்!
நிலைத்த தன்மை (Sustainability), இயக்கம் (Mobility) , வாய்ப்புகள் (Oppurtunity) என்று மூன்று தீம்களில் துபாய் எக்ஸ்போ வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ‘நிலைத்த தன்மை’ என்பது புதுப்பிக்கத்தக்க வளங்கள், விவசாயம் மற்றும் சூழலியல் சார்ந்த எதிர்கால மாற்றங்களை முன்னெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘இயக்கம்’ என்கிற தீம், தானியங்கி வாகனங்கள், விண்வெளி ஆய்வுகள் என நம்மை உலகோடு தொடர்புபடுத்தும் வாய்ப்புகளைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வாய்ப்புகள்’ தீம், உலகை இன்னும் மெருகேற்ற சிறந்த ஐடியாக்களைப் பரிமாறிக் கொள்ள, சமூக முதலீட்டாளர்களிடம் கற்று கொள்ள, மாற்றங்களை உருவாக்கும் திறனை மேம்படுத்த என உருவாக்கப்பட்டுள்ளது. ஐடியாக்களை முன்வைப்பது மட்டுமில்லாது செயல்படுத்தவும் செய்திருக்கிறார்கள். எக்ஸ்போவின் 50 சதவீத ஆற்றல், புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் பெறப்ப்படுகிறது. இந்த எக்ஸ்போவின் வடிவமைப்பாளர்களில் ஒருவரான அஹமத் அல் காதிப் (Ahmed Al Khatib), “எதிர்கால தேவைகளையும் அவசியங்களையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நகரம் அதே நேரத்தில் புதுப்பிக்கக் கூடிய தன்மையையும் மனிதர்களை மையமாக கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்கிறார். 4.38 சதுர கிலோமீட்டரில் 2,40,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து உருவாக்கப்பட்டிருக்கிற இந்தக் கண்காட்சிக்கு 25 பில்லியன் திராம் செலவை துபாய் அரசு மேற்கொண்டிருக்கிறது.
பெண்களுக்கென ஸ்பெஷல் பெவிலியன்!
இன்னொரு சிறப்பம்சம் பெண்களுக்கென்று தனித்த பெவிலியன் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதில் 1900 ஆண்டு முதல் வரலாறு முழுவதும் சாதனை புரிந்த பெண்களின் சாதனைகளை விளக்கும் வகையில் படங்கள், வீடியோக்கள், விரிட்சுவல் ரியாலிட்டி நேர்காணல்கள் எனப் பார்வைக்கு முன்வைத்திருக்கின்றனர்.
சிந்தனைகளை இணைப்பது, எதிர்காலத்தை உருவாக்குவது (Connecting Minds, Creating the Future) என்பதே கண்காட்சியின் ஒட்டுமொத்த நோக்கம். உலகெங்கிருந்தும் பல நட்சத்திரங்களும் அரசு அதிகாரிகளும் தலைவர்களும் கலந்து கொள்கிற இந்த நிகழ்வில் ஒரு அங்கமாக தமிழகத்தையும் முன்வைக்க தீர்மானித்திருக்கிறார்கள். கண்களுக்கு மட்டுமல்ல சிந்தனைக்கும் விருந்தாகும் வகையிலிருக்கும் இதன் வடிவமைப்பு மெய்சிலிர்க்க வைக்கும் என்பது நிதர்சனம்!