பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் இயக்கத்தில் கடந்த 11-ம் தேதி வெளியாகி, திரையரங்கங்களில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ். காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்துக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வந்துகொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தப் படத்துக்குக் கேளிக்கை வரிவிலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது டெல்லியில் நடந்துவரும் சட்டசபைக் கூட்டத் தொடரில் பா.ஜ.க `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது.
இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “இன்று நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் ஒவ்வொரு தெருவிலும் (தி காஷ்மீர் ஃபைல்ஸ்) திரைப்படத்துக்கான போஸ்டர்களை ஒட்டுகிறார்கள். இதை செய்யத்தான் நீங்கள் அரசியலுக்கு வந்தீர்களா? ஒரு நாட்டின் பிரதமர் நாட்டை ஆண்டுக் கணக்கில் ஆட்சி செய்து இறுதியில் விவேக் அக்னிஹோத்ரியின் பாதங்களில் தஞ்சமடைகிறார் என்றால், அவர் தனது பதவிக் காலத்தில் எதையும் செய்யவில்லை என்று தானே அர்த்தம்?
தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு செய்யுங்கள் என்று பா.ஜ.க-வினர் சொல்கிறார்கள். இந்த திரைப்படம் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என விரும்பினால் யூ டியூபில் போடுங்கள். அனைவரும் இலவசமாகப் பார்ப்பார்கள். இதற்கு வரிவிலக்கு வேண்டும் என ஏன் விரும்புகிறீர்கள்? யூடியூபில் போட்டால் அனைவரும் ஒரே நாளில் பார்ப்பார்களே.
நேற்று ஒரு நாளிதழில் ஹரியானாவில் பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் ஒரு பூங்காவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இலவசமாகத் திரையிடுவதாகக் கூறியுள்ளார். உடனே விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரை டேக் செய்து மக்கள் படத்திற்கான டிக்கெட் வாங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
காஷ்மீர் பண்டிட்கள் என்ற பெயரில் சிலர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் போஸ்டர் ஒட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள். எனவே செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்களைத் திறந்து பாருங்கள். அவர்கள் உங்களை ஆடுமாடுகளைப் போல நடத்துகிறார்கள்” என்று கூறினார்