புதுடில்லி: டில்லி வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயிடம், இரு நாட்டு உறவு தொடர்ந்து முன்னேறி செல்ல, எல்லை பகுதியில் விரைவாகவும், முற்றிலும் படைகளை திரும்ப பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார்.
டில்லி வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, இன்று காலை தெற்கு பிளாக்கில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: வாங் யீயிடம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னேறி செல்ல எல்லை பகுதியில் விரைவாகவும், முற்றிலுமாக படைகளை சீனா படைகளை திரும்ப பெற்று கொள்ள வேண்டும் என அஜித் தோவல் வலியுறுத்தினார்.
இரு நாடுகளின் நடவடிக்கைகள் சமமான மற்றும் பரஸ்பர பாதுகாப்பு உணர்வை மீறுவதில்லை என்பதை இந்தியாவும் சீனாவும் உறுதி செய்துள்ளன. மேலும், இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும், நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவை இயல்பாக்குவதற்கும், அமைதியை மீட்டெடுப்பதற்கும் தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் தொடர்புகளை தொடர வேண்டும் என இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. தோவல் மற்றும் வாங் இடையேயான இன்றைய கலந்துரையாடல் சுமூகமான சூழலில் நடைபெற்றதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அஜித் தோவல், வாங் யீ இடையிலான ஆலோசனை சுமூகமான சூழலில் நடந்தது. எல்லையில் தற்போதைய நிலைமை தொடர்வது, இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு உகந்தது இல்லை என்பதை இரு தரப்பும் ஒப்பு கொண்டனர். அமைதி மற்றும் அமைதியை நிலைநாட்டினால், பரஸ்பர நம்பிக்கையை வளர்க்கவும், உறவுகளின் முன்னேற்றத்திற்கான சூழலை உருவாக்கவும் உதவும் என்பதை இருவரும் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது அஜித் தோவலை சீனாவுக்கு வர வேண்டும் என வாங்யீ அழைப்பு விடுத்தார். அதற்கு, தற்போதைய பிரச்னைகள் தீர்ந்த பின்னர், உடனடியாக வருவதாக தோவல் உறுதி அளித்தார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement