சென்னை: அனைத்து பல்கலைக் கழகங்களிலும் நடத்தப்பட்டு வரும் எம்பில் பட்டப் படிப்பு 2022-2023ம் கல்வி ஆண்டு முதல் செல்லாது என்றும், அடுத்த கல்வி ஆண்டு முதல் எம்பில் பட்டப் படிப்பை நிறுத்திவிடவும் பல்கலைக் கழக மானியக்குழு திட்டமிட்டுள்ளது. பல்கலைக் கழகங்களில் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்கள் அடுத்ததாக எம்பில் என்ற பட்டப் படிப்பை முடித்தால் தான் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கான தகுதியாக வைக்கப்பட்டது. இந்த எம்பில் படிப்புகளை கடந்த 1977ம் ஆண்டு அனைத்து பல்கலைக் கழகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆசிரியர் பணியில் இருப்போர், முதுநிலைப் பட்டத்துக்கு பிறகு எம்பில் பட்டம்பெற்றிருந்தால், அவர்களுக்கு ஊக்கத்தொகையும் பெற வசதியாகவும் எம்பில் பட்டம் இருந்தது. இந்நிலையில், பல்கலைக் கழக மானியக் குழு இந்த முறையை தற்போது மாற்றி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை கொண்டு வந்துள்ளது. அதனால் எம்பில் பட்டம் எந்த கற்பித்தல் பணிக்கும் தகுதியற்றதாக மாற்றியுள்ளது. அதாவது, பல்கலைக் கழக மானியக் குழுவின் (முனைவர் பட்டம் (பிஎச்டி) வழங்குவதற்கான குறைந்த பட்ச தரம் மற்றும் விதிகளுக்கான மசோதா) ஒழுங்குமுறைகள் 2022ம் ஆண்டுக்கானது, இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளபடி, அடுத்த கல்வி ஆண்டில் எம்பில் பட்டம் என்பது இருக்காது என்றும், இந்த அறிவிப்பு வரை வழங்கப்பட்ட எம்பில் பட்டங்கள் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் தெரிவித்தபடி, பல மாநிலங்களில் செயல்படும் பல்கலைக் கழகங்கள், குறிப்பாக சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த ஆண்டே எம்பில் பட்டப் படிப்பை நிறுத்தி விட்டது. இதுகுறித்து சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், பல்கலைக் கழக மானியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவருமான பி.துரைசாமி கூறுகையில், ‘பல்கலைக் கழகத்தின் ஒழுங்குமுறைகளை அதற்கான ஆணையத்தின் அனுமதி பெற்றுவிட்டால் 2022-2023ம் ஆண்டு முதல் எம்பில் பட்டத்தின் அங்கீகாரம் ரத்தாகிவிடும். இருப்பினும், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில பல்கலைக் கழகங்கள் 2021-2022ம் கல்வி ஆண்டுக்கு எம்பில் பட்டப்படிப்புக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளன’ என்றார். இந்நிலையில், எம்பில் பட்டத்தால் எந்த பயனும் இல்லை என்பதால், பல பள்ளி ஆசிரியர்கள் ஊக்கத் தொகை பெறுவதற்காக அந்த பட்டத்தை படித்து வருகின்றனர் என்று தேசிய அளவிலான மற்றும் மாநில அளவிலான தகுதித் தேர்வர்கள் சங்கத்தின் ஆலோசகர் நாகராஜன் தெரவித்துள்ளார்.