சென்னை:
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக நான்கு நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் மர்ரி, வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடு மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்களின் குழுவினையும் தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‘நம்பர் 1 தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய அமீரகப் பயணம் பயனுள்ளதாக அமையும் என்ற நம்பிக்கை ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மற்றும் அயலக வர்த்தகத் துறையின் இணை அமைச்சருடனான சந்திப்பில் வலுப்பெற்றது என்றும், தமிழக-அமீரக உறவைப் போல வலுவானதாகச் சந்திப்பு அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.