'அவர் எங்கிருந்தாலும் அரசன்தான்!' – கேப்டன் தோனிக்கு ஓய்வுண்டு, ஆனால் தலைவனுக்கு இல்லை!

கோப்பைகளின் கோமகன், ஐபிஎல் கேப்டன்களின் பிதாமகன், கேப்டன் பணிக்கு பிரியாவிடை கொடுத்து ஓய்வுபெற்றுள்ளார்.

ஐந்தாவது கோப்பையை தோனி வெல்வார்; தனது போட்டியாளர் மும்பையின் சாதனையை சிஎஸ்கே சமமாக்கும்; கோப்பை, கொண்டாட்டங்களுடன் தோனியின் பிரிவு உபச்சாரம் நடக்கும் என்ற கனவிலிருந்த ரசிகர்களுக்கு, இடியாக வந்து இறங்கியுள்ளது தோனி தன் கேப்டன் பதவியை, ஜடேஜாவிடம் அளித்துள்ள துக்க செய்தி.

ஐபிஎல் அதிகாரத்தில் 12 சீசன்களில் சிஎஸ்கே ஆடிவிட்டது. அதில், 11 முறை பிளேஆஃபிற்கு முன்னேறி வேறு எந்த அணியும் செய்யாத சாதனையையும் நிகழ்த்திவிட்டது. அங்கிருந்து 9 முறை இறுதிப்போட்டியை எட்டி, நான்கு முறை சாம்பியன் மகுடமும் தரித்துவிட்டது. ஆனால், இந்த 12 ஆண்டுகளில் இத்தனை போட்டிகளுக்கும் சிஎஸ்கேயின் கேப்டனாக இருந்துள்ளது இரண்டே கேப்டன்கள்தான்; தோனி மற்றும் ரெய்னா. அதிலும் தோனியின் உடல் நலம் சரியில்லாத சமயங்களில், ஒற்றை இலக்கப் போட்டிகளில் மட்டுமே ரெய்னா கேப்டனாக ஆடியுள்ளார். மற்றபடி, சிஎஸ்கே என்றால் தோனி, தோனி என்றால் சிஎஸ்கே எனுமளவு பிரித்துப் பார்க்க முடியாததாகவே இந்தப் பந்தம் தொடர்ந்துள்ளது, தொடர்ந்து வருகிறது.

தோனி

அணிக்கான அஸ்திவாரம் 2008-ல் இடப்பட்டதில் தொடங்கி, கோர் அணி கட்டமைக்கப்பட்டு, சிஎஸ்கே ஏற்ற இறக்கங்களையும், கனவுகளையும் கறைகளையும் மாற்றி மாற்றி, பல கட்டங்களில் பயணப்பட்டு விட்டது. ஒவ்வொரு முறை ஒரு அணியாக புறப்பட்டு வரும் போதெல்லாம் விமர்சகர்கள் பார்வைக்கு அணியில் பல ஓட்டைகள் தென்படும். அது சிஎஸ்கேவின் சரிவுக்கான சாரமாகப் பார்க்கப்படும். ஆனால், இந்த ஒற்றை மனிதரது கண்களுக்கு மட்டுமே அது சிகரத்தினை நோக்கிய வழியாகக் காணப்படும்.

சிஎஸ்கேவுக்கு தலைமையேற்ற 190 போட்டிகளில், அவரது அசரவைக்கும் வெற்றிச் சதவிகிதம் 61.37. வெற்றி பெற்ற இந்த 116 போட்டிகளையும் எடுத்துப் பார்த்தால், பல போட்டிகளில், “முடிந்தது கதை”, “இதற்குப் பின் எதுவுமேயில்லை”, “தோல்வியை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் போலும்” என ஏதோவொரு கட்டத்தில் உதடுகளைப் பிதுக்கி ஒத்துக் கொள்ள வேண்டி இருந்திருக்கும். ஆனால், அந்தச் சாத்தியக்கூறுகளில் இருந்து அசாத்தியமாக மீண்டு வந்து, சிஎஸ்கே அணி த்ரில் வெற்றியைச் சுவைத்திருக்கும். இந்த உயிர்ப்பு, மோதிப் பார்த்து விட வேண்டுமென்ற உத்வேகம் இவை எல்லாம் தோனியால் அணிக்குள் கடத்தப்பட்டவை. தலைவன் எவ்வழியோ, படைகளும் அவ்வழிதானே?!

மற்ற அணிகள் எல்லாம் பிளேயிங் லெவனோடு பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்கும் சமயத்தில் சிஎஸ்கே மட்டும் தோல்வி, வெற்றி என எதனையும் ஏற்றுக் கொண்டு அதே அணியோடே முன்னேறிக் கொண்டிருக்கும். கேதர் ஜாதவ் தொடர்ந்தற்கான காரணம் முதல் வாட்சனுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகள் வரை ஏதோ ஒன்று, உறுத்தலாகி கேள்விக் கணைகளைத் தொடுக்க வைக்கும். ஆனால், அதற்கான பதில்கள் தோனியிடமிருந்து வராது; அடுத்தடுத்த போட்டிகளின் முடிவிலிருந்து வரும். அடுத்தடுத்த ஆண்டுகளுக்கும் சேர்த்ததாக இருக்கும் அவரது எண்ண ஓட்டங்கள். இருப்பதை வைத்துக் கொண்டு எப்படி முடியாததை முடித்துக் காட்ட வேண்டுமென்பது தோனி, நடத்திக் காட்டிய பாடம். “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்ற இறுமாப்பெல்லாம் முகத்திலோ சைகையிலோ வெளிப்படாமல், செயல்களில் வெளிப்படுத்த வைத்தவர்.

தோனி

உள்ளூரில் மோதிப் பார்த்து 2010 மற்றும் 2011-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பைகள், வெளியூர் அணிகளுடனும் பலம் காட்டி 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20 டைட்டில்கள் என எல்லாவற்றையும் வாரிச் சுருட்டிய பின், கோப்பைகளற்று வறண்டு காணப்பட்டது சிஎஸ்கேயின் வானிலை. இரண்டு ஆண்டுகள் தடை நெருஞ்சி முள்ளாய் நெஞ்சில் பாய, மீண்டெழவே முடியாதவாறு சிஎஸ்கேவிற்கு முகாரி பாடப்பட்டு விட்டது என்ற சமயத்தில்தான் 2018-ம் ஆண்டு கம்பேக் நடந்தேறியது. வீரர்கள் புடை சூழ, தோனி மறுபடியும் வேட்டையாட கிளம்பி வந்த காட்சிகள் இன்றளவும் சிஎஸ்கே ரசிகர்கள் மனதில் பசுமையாக இருக்கும், “தோனி, தோனி” என மந்திரம் போல சேப்பாக்கம் மைதானமே அதிர, அணி திரும்ப ஆட இறங்கிய தருணம், தோனியின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல சிஎஸ்கே ரசிகர்களுக்கும் நெகிழ்வான கண்கள் பனிக்க வைத்த தருணம்தான்.

விலையில்லாதவைதானே விமர்சனங்கள்? அப்போதும் கிளம்பி வந்தன. நம்பிக்கையுடன் தோனி அழைத்து வந்த அணி, “டாடீஸ் ஆர்மி” என இளக்காரமாகப் பார்க்கப்பட்டது. முன்னமே சொன்னதுபோல், புல்லையும் ஆயுதமாக்கும் கலை தோனிக்கு மனனம். அதே படையோடு வெற்றி நடைபோட்ட போது விமர்சனங்களும் விமர்சகர்களும் காற்றோடு காணாமல் போக, சிஎஸ்கேயின் எழுச்சியும் அதில் தோனியின் முயற்சியும் மட்டுமே பெரிதாய்ப் பேசப்பட்டது.

சிஎஸ்கேயை தோனியோ, தோனியை சிஎஸ்கேயோ, எத்தருணத்திலும் விட்டுக் கொடுத்ததில்லை. சென்னை அவரது இன்னொரு வீடு எனச் சொல்லுமளவு, மனதளவில் அதனுடனான அவரது நெருக்கம் அதிகமானதால்தான், சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் முடிவைக் கூட சிஎஸ்கேயின் பயிற்சிப் பாசறையிலிருந்து வெளியிட்டார். அதுவும் எப்படி? ஒரு சாதாரண இன்ஸ்டாகிராம் போஸ்டின் மூலமாக!

அவர் தலையசைத்திருந்தால் ஃபேர்வெல் போட்டிகளை பிசிசிஐ அமைத்துத் தந்திருக்கும். ஆனால் அது அவரது பாணியில்லை. ஆர்ப்பாட்டமில்லாமல்தான் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார், ஓய்வு முடிவினை அறிவித்தார், இப்போதும்கூட அப்படியேதான் வெறும் ப்ரஸ் ரீலிஸோடு எல்லாவற்றையும் முடித்துக் கொண்டிருக்கிறார். அதுதான் அவரது தனித்தன்மை. கோலியின் உடன் நின்று, கற்றுக் கொடுத்து பின் விலகியதைப் போல தற்போது ஜடேஜா விஷயத்திலும் அதே அணுகுமுறையைத்தான் தோனி பின்பற்றுகிறார். சுவடில்லாமல் விலகுகிறார், ஆனால் இதயங்கள் உடையும் சத்தமோ எப்போதும் பலமாகவே கேட்கிறது.

தோனி

களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முழுமையான கேப்டன் அவர். அவரது ஒவ்வொரு நகர்வும் அணியை உச்சத்தை நோக்கிப் பயணிக்க வைத்துள்ளது. ஒரு சர்வதேச அணிக்கான தந்திரோபாயங்களை ஒவ்வொரு சிஎஸ்கே போட்டியிலும் அரங்கேற்றினார். ஆல் ரவுண்டர்களைச் சரியான வகையில் பயன்படுத்தியது, ஸ்பின்னர்களின் பந்துகள் பவர் பிளேயில் அடி வாங்கும் என யோசிக்காமல் அவர்களைத் துணிவாக இறக்கி, வேறு கோணத்தில் யோசித்தது, வலக்கை இடக்கை காம்பினேஷன்கள் பேட்டிங் ஆர்டர் முழுவதும் தொடர கவனம் எடுத்துக் கொண்டது என அவரது செய்த சின்ன சின்ன மாற்றங்கள்தான், பெரிய தாக்கத்துக்கு வித்திட்டன. வேகத்துக்காக ஓவர்சீஸ் பௌலர்களிடம் அடைக்கலம் புகாமல் இந்திய வேகங்களைக் கொண்டே அவர்களது வேரியேஷன்களைக் கொண்டே சாமர்த்தியமாக விக்கெட்டுகளை விழச் செய்தவர்.

கேப்டனாக மட்டுமல்ல, பேட்ஸ்மேனாகவும் சிஎஸ்கே தோனிக்குக் கடமைப்பட்டிருக்கிறது. எந்தச் சூழ்நிலையில் பேட்டோடு இறங்கினாலும், பந்து வீச வருவது எவ்வளவு பெரிய பௌலராக இருந்தாலும், எட்ட வேண்டியது எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும், கையில் எந்த விக்கெட்டுமே இல்லாமல் இருந்தாலும், அவரது முகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது. தொடக்கத்தில் டாட் பால்களும், சிங்கிள்களும் மட்டுமே அதிகமாக இருக்கும். ஆனால், இறுதியில் ரன்கள் ராக்கெட் வேகமெடுத்து தன் இலக்கைக் கச்சிதமாகத் தொட்டுவிடும். கடைசி ஓவர், கடைசி பந்திலாவது ஹெலிகாப்டர் ஷாட் அடிக்கப்பட்டு வெற்றி சாத்தியமாகும். கேப்டன் இன்னிங்ஸ்கள் பல போட்டிகளில் அணியைக் கரை சேர்த்திருக்கிறது.

கேப்டனாக மட்டும் கிட்டத்தட்ட 40 என்ற ஆவரேஜோடு 137 ஸ்ட்ரைக் ரேட்டோடும் ரன்களைக் குவித்துள்ளார் தோனி. பேட்டிங்கில் பராக்கிரமம் காட்டுவார் என்றால் விக்கெட் கீப்பராகவோ மின்னலை மிஞ்சுவார். டிஆர்எஸுக்கே டிப்ஸ் கொடுக்கக் கூடியவராகவே தோனி வலம் வந்தார். அணிக்கான அத்தனையுமாக அவர் இருந்தார்.

அவமானங்களைத் துடைத்தெறிந்து சிஎஸ்கேயை மீண்டெழ வைத்ததே தோனியின் உச்சகட்ட சாதனையாகப் பார்க்கப்பட, அது எல்லாம் சாம்பிள்தான் எனுமளவு இருந்தது 2021 கம்பேக். 2020-ம் ஆண்டு சிஎஸ்கேயின் சோதனைக் காலகட்டம். ஒரு போட்டியில்கூட பழைய தோனியின் தொனியையோ, வெற்றிக்கான வழியையோ பார்க்க முடியவில்லை. மீம் மெட்டீரியலாக மட்டுமே அந்த சீசன் முடிந்து போனது. சாமான்யன் சாம்பியனாவதற்கான தகுதி, விழுவதற்கும் எழுவதற்குமான கால வேறுபாடுக்கு எதிர்தகவு. 2021-ம் ஆண்டே பழைய மரபுகளுக்கு உட்பட்டு மகுடம் சூட்டி, எழுந்த கேலிகளுக்கெல்லாம் பதிலடியை நெற்றியடியாகத் திரும்பத் தந்தது சிஎஸ்கே.

தோனி

இப்பொழுதும் கோப்பையோடு, நடப்பு சாம்பியன்கள் என்னும் புகழோடும்தான் தனது சக்கரவர்த்தி அரியணையில் ஜடேஜாவை அமர்த்தியுள்ளார் தோனி. இந்த ஒரு சீசனும் உடனிருந்து, ஜடேஜாவை செதுக்குவதுதான் அவரது நோக்கமாக இருந்திருக்கும்.

சில விஷயங்களை நாம் இனி காண முடியாது என்பது வலி தரும் நிஜம்தான்!

டாஸின் போது அந்த நம்பிக்கை தெறிக்கும் வார்த்தைகளையும், டிஆர்எஸ் கேட்கும் போது அந்த முகத்தின் தெளிவையும், வெற்றி பெற்றால் வெளிப்படும் அந்தச் சின்னச் சிரிப்பையும், தோல்வியடைந்தால் அதையும் காட்டாத அந்த முக பாவனையையும், பிரசன்டேஷனின் போது பேசும் அந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகளையும் என அத்தனையையும் தவற விடத்தான் போகின்றோம், சிஎஸ்கே ரசிகர்கள் பட்டாளத்தோடு நாமும்!

“கேப்டனாக தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது” என்ற வருத்தம் காற்றில் கனமேற்றினாலும், ஒருவேளை இந்த சீசன் முடிந்து வீரராகவும் விடைபெற்றாலும், பயிற்சியாளர் என்னும் அடையாளத்தோடு மறுபடியும் தொடர்வார் என்பதே உண்மை. அவரைவிட்டு சிஎஸ்கே எங்கே சென்றுவிடப் போகிறது? சிஎஸ்கேயை விட்டு தோனிதான் எங்கே சென்றுவிடப் போகிறார்?! களத்திற்குள் இருந்து பார்த்த பார்வையைவிட, அடுத்த சீசனில் வெளியில் பயிற்சியாளராக அமரும் அவரின் பார்வை இன்னமும் விசாலமாக விரியும். அது போட்டி அணிகளுக்கு இன்னமும் ஆபத்தானதாக இருக்கலாம். காரணம், அந்தக் கழுகுப் பார்வையில் இன்னமும் பல கோப்பைகளைச் சிக்க வைப்பதற்கான தெளிவு இருக்கும். ‘பாகுபலி 2’ படத்தில் நாசர் சொல்வதுபோல “அவர் எங்கிருந்தாலும் அரசன்தான்!”

தலைவனாக அவர்,

இருந்தார்,

இருக்கிறார்,

இருப்பார்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.