`ஆந்திராவிலிருந்து சேலம், திருச்சி வழியாக காரில் கஞ்சா கடத்தி வருகிறார்கள்’ என்ற ரகசியத் தகவல், போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவி எஸ்.பி ரோகித்நாதனுக்கு கிடைத்திருக்கிறது. அதையடுத்து அந்தத் தகவல் திருச்சி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி (பொ) பரத் சீனிவாஸூக்கு சொல்லப்பட்டு அலர்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தல் கும்பல் தப்பிவிடக் கூடாதென டி.எஸ்.பி பரத் சீனிவாஸ் தலைமையிலான போலீஸார் திருச்சி சமயபுரம் டோல் பிளாசாவில் நேற்று அதிகாலை முதல் தீவிர வாகன சோதனை நடத்தி வந்தனர். அப்போது டோல் பிளாசாவைக் கடந்த சொகுசு கார் ஒன்றை போலீஸார் சோதனை செய்தபோது, காரின் டிக்கியில் சாக்கு மூட்டையில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து கஞ்சா கடத்தி வந்த ஆசை என்பவரையும், காரை ஓட்டி வந்த புவனேஸ்வரன் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி ஜே.எம் – 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து டி.எஸ்.பி பரத் சீனிவாஸிடம் பேசினோம். “கஞ்சா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஆசை என்பவர் தேனி மாவட்டம், மூனாண்டிபட்டியைச் சேர்ந்தவர். ஆசை மீது மட்டுமல்லாமல், அவருடைய குடும்பத்தினர், உறவினர் என பலர் மீதும் பல கஞ்சா கடத்தல் வழக்குகள் இருக்கின்றன. அதில் அவருடைய குடும்பப் பெண்களும் அடக்கம். ஆந்திராவிலிருந்து கார் மூலமாக கஞ்சா கடத்தி வரும் இந்தக் கும்பல், அரசியல் எஸ்கார்ட் வாகனங்களைப் போல கடத்தல் கார் முன் சில கார்களோடு பயணிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வழியில் போலீஸார் சோதனை மேற்கொண்டால், முன்னே செல்லும் கார்கள் பின்னால் வரும் கஞ்சா கடத்தல் காரை உஷார் செய்துவிடும். மேலும், விலையுர்ந்த காரில் கஞ்சா கடத்தினால் யாருக்கும் சந்தேகம் வராது என திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளனர். விரைவில் இவர்களை வைத்து இவர்களுடன் தொடர்பில் உள்ள கஞ்சா நெட்வொர்க் முழுவதையும் பிடிப்போம்” என்றார்.
திருச்சியில் இந்தக் கும்பல் கைதாவதற்கு முன்பே, இவர்களுடன் வந்த டீம் ஒன்று சேலத்தில் 200 கிலோ கஞ்சாவை வீசிவிட்டு தப்பியிருக்கிறது. அதன்பிறகே சென்னையிலிருந்து அலர்ட் செய்யப்பட்டு, திருச்சியில் இந்தக் கடத்தல் கும்பல் கைதாகியிருக்கிறது.