Orange Peel Chutney in tamil: பழ வகைகளில் உலகளவில் பிரபலமான ஒரு பழமாக ஆரஞ்சுப் பழம் உள்ளது. சிட்ரஸ் அமிலம் செறிந்து காணப்படும் இந்த அற்புத பழம், அதன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காக கொண்டாடப்படுகிறது. எனினும், இவற்றின் தோல்கள் அனைவராலும் தூக்கி எறியப்படுகிறது.
ஆனால், ஆரஞ்சு தோல்களில் ஏராளமான ஆரோக்கிய சத்துகள் நமக்காக காத்திருக்கின்றன. நீங்கள் ஆரஞ்சுப் பழத் தோலின் நன்மைகளை அறிந்து, அதனை உட்கொள்ள வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்று யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய சில அற்புத நன்மைகளை பார்க்கலாம்.
ஆரஞ்சு பழ தோலின் ஆரோக்கிய நன்மைகள்:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. அவற்றின் தோலிலோ வைட்டமின் சி, நார்ச்சத்துகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற தாவர சேர்மங்களும், பல ஊட்டச்சத்துக்களும் நிரம்பி காணப்படுகிறது. இது, இதய ஆரோக்கியத்திற்கும், செரிமான மண்டலம் நன்றாக வேலை செய்வதை ஊக்குவிக்கும்.
ஆரஞ்சு தோலில் உள்ள பாலிபினால்கள் உடல் பருமன், அல்சைமர் நோய் மற்றும் டைப் -2 நீரிழிவு போன்ற நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவுகிறது.
கூடுதலாக, ஆரஞ்சி தோல் முழுதும் வைட்டமின் பி 6, கால்சியம், புரோவிட்டமின் ஏ மற்றும் ஃபோலேட் ஆகிய நுண் ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.
இவை தவிர இன்னும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. ப்ரோ விட்டமின் ஏ, தயமின், விட்டமின் பி6 மற்றும் கால்சியம் போன்றவையும் காணப்படுகிறது.
இப்படி ஏராளமான சத்துக்களை கொண்டுள்ள ஆரஞ்சு தோலில் நா ஊறும் துவையல் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
ஆரஞ்சு தோலில் டேஸ்டி துவையல் செய்யத் தேவையான பொருட்கள்
பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோல் – கைப்பிடி அளவு,
இஞ்சி – சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 1,
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
ஆரஞ்சு தோல் துவையல் சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து எண்ணெய் விட்டு சூடானதும் ஆரஞ்சுதோலை போட்டு நன்றாக வதக்கவும்.
பிறகு அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டு இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
பின்னர், வதக்கிய ஆரஞ்சுத் தோல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சூப்பரான, டேஸ்டியான ஆரஞ்சுத் தோல் துவையல் தயார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“