ஆர்ஆர்ஆர் – தெலுங்கு சினிமாவை மீண்டும் உயர்த்திய ராஜமவுலி
இந்தியத் திரையுலகத்தில் கடந்த பல வருடங்களாகவே ஹிந்தி சினிமாக்கள்தான் இந்திய சினிமா என்ற ஒரு மாயை இருந்து வந்தது. எத்தனையோ சிறப்பான வங்காள மொழிப் படங்கள், மலையாளப் படங்கள், தமிழ்ப் படங்கள், தெலுங்குப் படங்கள் வந்தாலும் ஹிந்திப் படங்களை மற்ற மாநில மொழிப் படங்களை விடவும் சிலர் உயர்த்திப் பிடித்து வந்தார்கள்.
குறிப்பாக கமர்ஷியல் சினிமாக்கள் என்றாலே ஹிந்தியில்தான் அதிக செலவு, அதிக பிரம்மாண்டம் என்று இருந்தது. ஆனால், கடந்த சில வருடங்களில் உலக அளவில் இந்தியப் படங்களுக்கான வியாபாரம் விரிவடைந்த போது ஹிந்திப் படங்கள் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிப் படங்களும் அந்த வியாபார எல்லைக்குள் சென்று சாதிக்க ஆரம்பித்தன.
தெலுங்கு இயக்குனரான ராஜமவுலி 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய படங்கள் மூலம் ஹிந்திப் படங்களை மிஞ்சும் அளவிற்கு வசூல் சாதனை படைக்க வைத்தார். அதிலும் குறிப்பாக 'பாகுபலி 2' படம் இந்தியாவில் மட்டுமே 800 கோடிக்கும் அதிகமான வசூலையும், உலக அளவில் 1800 கோடியையும் வசூலித்தது. வசூல் மட்டுமல்ல அந்தப் படத்தின் பிரம்மாண்ட உருவாக்கமும் அதிகமாக பேசப்பட்டது.
அது போல மீண்டும் ஒரு முறை தன்னைப் பற்றிப் பேச வைத்திருக்கிறார் ராஜமவுலி. அவரது இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தின் உருவாக்கம் ரசிகர்களிடம் பேசு பொருளாக மாறியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ராஜமௌலியைப் பாராட்டி திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் அதிகமாகப் பதிவிட்டு வருகிறார்கள். மீண்டும் ஒரு முறை தெலுங்கு சினிமாவை உயர்த்தி உயரத்தில் உட்கார வைத்துவிட்டார் ராஜமவுலி என்றே பலரும் பாராட்டுகிறார்கள்.